ரயில் டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு - புதிய விலை பட்டியலை வெளியிட்ட ரயில்வே அமைச்சகம்
நாடு முழுவதும் ரயில் டிக்கெட் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 26ஆம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் ரயில் டிக்கெட் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், புதிய கட்டணக் கட்டமைப்பை அறிவித்துள்ளது. அதன்படி, சாதாரண வகுப்பில் 215 கி.மீ.க்கு குறைவான பயணங்களுக்கு எந்தவித கட்டண உயர்வும் இல்லை.
அதேநேரம், சாதாரண வகுப்பில் 215 கி.மீ.க்கு மேற்பட்ட பயணங்களுக்கு ஒரு கிலோமீட்டருக்கு 1 பைசா வீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதுவே, மெயில் அல்லது எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி அல்லாத மற்றும் ஏசி வகுப்புகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசா வீதம் கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, 500 கி.மீ. தூர ஏசி அல்லாத பயணத்திற்கு பயணிகள் கூடுதலாக ரூ. 10 செலுத்த வேண்டிய நிலை இந்த கட்டண உயர்வு மூலம் உருவாகியுள்ளது. இந்த கட்டண உயர்வு மூலமாக ரூ. 600 கோடி வரை வருவாய் ஈட்ட முடியும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக ரயில்வே கட்டணம் உயர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
எனினும், புறநகர் ரயில்கள் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளுக்கு கட்டண உயர்வு எதுவும் அறிவிக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களின் விளைவாக கூடுதல் செலவு என்பது ரயில்வே துறைக்கு ஏற்பட்டது. அதனை ஈடுகட்டும் விதமாக இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில்வே நிர்வாகத்தில் மனித வள செலவு ரூ.1.15 லட்சம் கோடியும், ஓய்வூதிய செலவு ரூ.60,000 கோடியும் அதிகரித்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தனது அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
2024-25ஆம் ஆண்டில் மொத்த செயல்பட்டு செலவு என்பது ரூ. 2.63 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதன் காரணமாகவும் இந்த கட்டண உயர்வு தேவைப்படுவதாக தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.