அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் தெரியும் என கூறி பல லட்ச ரூபாய் மோசடி! சென்னையில் பலே ஆசாமி கைது!

அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் தெரியும் என கூறி பல லட்ச ரூபாய் மோசடி! சென்னையில் பலே ஆசாமி கைது!

அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் ஆகியோருடன் எடுத்த புகைப்படங்களை வைத்துக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆவடி நந்தவனம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (54) வியாபாரம் செய்து வருகிறார். இவர், கடந்த வாரம் ஆவடி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், திருமுல்லைவாயல் வைஷ்ணவி நகரில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ள திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசன் என்கின்ற வாசு (32) எனது கார் ஓட்டுநர் சரவணன் என்பவர் மூலம் அறிமுகமானார்.

அவர் என்னிடம் பாஜக பிரபலங்கள், திரையுலக கலைஞர்கள் உள்ளிட்ட பலரை தெரியும் என்றும், அதன் மூலம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வீடு வாங்கித் தருவதாக கூறி, 20-க்கும் மேற்பட்டோரிடம் 20 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றி வருவதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து ஆவடி காவல் நிலைய குற்றப்பிரிவில் சிஎஸ்ஆர் பதிவு செய்து விசாரணையில் துவக்கினர். இதனை அறிந்ததும் தலைமறைவான ஸ்ரீனிவாசனை, ஆவடி குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெகன் தலைமையில் தனிப்படை அமைத்து உதவி ஆய்வாளர் சிவக்குமார், தலைமைக் காவலர் செல்வவேல், ராஜா, கேசவன் மற்றும் காவலர்கள் ஆகியோர் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று திருமுல்லைவாயில் பகுதியில் உறவினர் இறுதிச் சடங்கிற்கு கலந்து கொள்ள வந்த சீனிவாசன் என்கின்ற வாசுவை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் இவர் மீது மேலும் ஒரு மோசடி புகார் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. அதாவது, கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் ராமானுஜம் (72) என்பவர் தன்னிடம் கடந்த 2023 நவம்பர் மாதம் அறிமுகமான சீனிவாசன் மற்றும் நிர்மலா ஆகியோர் தங்களுக்கு பாஜகவில் செல்வாக்கு உள்ளதாகவும், மாநில அளவில் பதவி வாங்கித் தருவதாக 3.11.2023 அன்று 70 லட்சம் பணம் கேட்டனர். ஆனால் 05.01.2025ஆம் தேதி வரை ரூபாய் 44 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியது தெரிய வந்தது.

ராமானுஜம் கடந்த 2011 ஆம் ஆண்டு தேமுதிக சார்பில் ஆவடி நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அதனை தொடர்ந்து கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் கடலூர் தொகுதியில் தேமுதிக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, பின்னர் மாற்றப்பட்டார்.

இவரிடம் மோசடியில் ஈடுபட்ட சீனிவாசன் போலியாக சாமியார் வேடம் அணிந்து பாண்டிச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை உள்ளிட்ட பல பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்து வைத்து காவல்துறை, வருவாய்த்துறை என அரசுத்துறையில் உயர் பதவிகள் வாங்கி தருவதாக கூறி பலரிடம் பல லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.