"டெல்லியின் ஆதிக்கத்துக்கு தமிழ்நாடு அடிபணியாது" - காஞ்சியில் மோடியை கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்த ஸ்டாலின்

"டெல்லியின் ஆதிக்கத்துக்கு தமிழ்நாடு அடிபணியாது" - காஞ்சியில் மோடியை கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்த ஸ்டாலின்

டெல்லியின் ஆதிக்கத்துக்கு தமிழ்நாடு என்றும் அடிபணியாது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட கூறினார்.

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டம், காஞ்சிபுரம், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில்  நடைபெற்றது.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழத முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அவர் தமது உரையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, திமுக அரசு மீது சுமத்திய பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்தார்.

அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்துவிட்டதாக பிரதமர் மோடி பொத்தம்பொதுவாக குற்றம்சாட்டிவிட்டு சென்றுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள துறைமுகங்களில்தான் அதிகமான அளவு போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்விரு மாநிலங்களிலும் நீங்கள் (மோடி) சொல்லும் பாஜகவின் டபுள் எஞ்சின் ஆட்சிதானே நடைபெறுகிறது? எனவே இந்த குற்றச்சாட்டை நீங்கள் அங்குதானே வைக்க வேண்டும்? மகாராஷ்டிராவில் பேச வேண்டியதை மதுராந்தகத்தில் பேசுவது நியாயமா?” என்று ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

அதேபோன்று, மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது, 'தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை' என்றும் குற்றம்சாட்டியிருந்தார். அதற்கும் காஞ்சிபுரம் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.

இதுகுறித்து அவர் பேசும்போது, “5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கின் குற்றவாளிகள் 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்து உலகையே அதிர்ச்சியில் உறைய வைத்தது குஜராத் மாநில பாஜக அரசு. ஆனால், பாலியல் வன்கொடுமை வழக்குகளில் தண்டனை பெறும் குற்றவாளிகளுக்கு முன்கூட்டி விடுதலை இல்லை என்ற சட்டத்தை நிறைவேற்றியது எனது தலைமையிலான திராவிட மாடல் அரசு. இங்கு வந்து நீங்கள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பேசலாமா?” என்று ஸ்டாலின் பதில் கேள்வி எழுப்பினார்.

அத்துடன், அதிமுக -பாஜக கூட்டணியையும் தமது உரையில் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். இதுகுறித்து அவர் பேசும்போது, “மோடியா? லேடியா? என்று ஜெயலலிதா உங்களை பார்த்து கேட்டது நினைவிருக்கிறதா? இந்தியாவில் ஊழல்கள் மலிந்த ஆட்சி அதிமுக ஆட்சிதான் என்று நீங்களும், அமித் ஷாவும் சொன்னதாவது உங்களுக்கு நினைவிருக்கிறதா? இதையெல்லாம் நீங்கள் வேண்டுமானால் மறந்திருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டுக்கு நீங்கள் இழைத்துவரும் அநீதிகளை தமிழக மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்” என்றார்.

தோல்வியை தவிர எதையும் அறியாத தி கிரேட் பத்து தோல்வி பழனிசாமியுடன் இன்று கைகோர்த்துக்கொண்டு, எங்களது கொள்கை கூட்டணியை நீங்கள் விமர்சிப்பதா? என்று கேட்ட ஸ்டாலின், 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? என்றும் வினவினார்.

அப்போது நீங்கள் எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தீர்கள்? ஆனால் ஒரு தொகுதியிலாவது உங்களால் வெற்றிப்பெற முடிந்ததா? அதேபோன்றதொரு முடிவை தான் தமிழ்நாட்டு மக்கள் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் உங்களுக்கு தரப்போகிறார்கள் என்றார்.

2026 தேர்தலும் திராவிட, ஆரிய போரின் மற்றொரு களம் தான் என்று கூறிய ஸ்டாலின், இந்த போரில் மண், மொழி, மானம் காக்க அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் இருந்து இன்றைய தேர்தல் பரப்புரையை தொடங்குங்கள் என்று கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களையும், திமுகவினரையும் கேட்டுக் கொண்டார்.

மொழிப்போர் தியாகிகள் மீது ஆணையிட்டு சொல்கிறேன். டெல்லியின் ஆதிக்கத்துக்கு தமிழ்நாடு என்றும் அடிபணியாது. தீ பரவட்டும் என்று ஸ்டாலின் தமது உரையை நிறைவு செய்தார்.