மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை; நெல்லை போக்சோ நீதிமன்றம் அதிரடி

மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை; நெல்லை போக்சோ நீதிமன்றம் அதிரடி

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு போக்சோ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அதில், 14 வயதான சிறுமி 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்தாண்டு ஜனவரியில் அந்த சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்படவே சிறுமியின் தாய் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காண்பித்துள்ளார்.

அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடித்தனர். இதனால் சிறுமியின் தாயும், மருத்துவர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து சிறுமியிடம் விசாரித்த போது, கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் சிறுமிக்கு அவரது தந்தை பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரிய வந்தது.

இதனால் பேரதிர்ச்சி அடைந்த தாய் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே கர்ப்பமான சிறுமி குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அந்த குழந்தைக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்ததில், பெற்ற தந்தையே மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு திருநெல்வேலி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று (ஜன.5) தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி, திருநெல்வேலி மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 லட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசின் சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.