ஆதவ் அர்ஜுனா நேர்மையானவர் இல்லை.. விஜய்யின் முன்னாள் மேனேஜர் பி.டி.செல்வகுமார் குற்றச்சாட்டு
ஆதவ் அர்ஜுனா நேர்மையான நபர் இல்லை என்று விஜய்யின் முன்னாள் உதவியாளர் பி.டி.செல்வகுமார் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் இளம்விதவைகள் உருவாவதை தடுக்க சினிமாவில் பல்வேறு கருத்துக்களை மக்களுக்கு எடுத்துக் கூறிய மறைந்த நடிகர் விவேக் பிறந்த நாளை முன்னிட்டு கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக நடிகரும், தவெக கட்சித் தலைவர் விஜய்க்கு 27 ஆண்டுகளாக தகவல் தொடர்பாளராக பணியாற்றிய பி.டி.செல்வகுமார் சென்னை விருகம்பாக்கம் ஏவிஎம் பார்க் அருகில் 100 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் வறுமையில் உள்ள சினிமா காமெடி நடிகர்களுக்கு பண உதவி செய்தார்.
இதன் பிறகு பி.டி.செல்வகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ''
ஆதவ் அர்ஜுனா நேர்மையான நபர் இல்லை. தன்னுடைய 9 வயதை குறைத்து திருமணம் செய்து இருக்கிறார். கரூர் சம்பவத்தை எதிர்கொள்ளும் விதமாக தமிழக முதலமைச்சர் திறன் பட பணியாற்றியுள்ளார். அதை யாரும் குறை சொல்ல முடியாது. தற்போது நடைபெற்ற தவெக பொதுக்குழு கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா, 'விஜய்யை தொட்டுப்பார். கல்லூரியில் இருக்கக் கூடிய மாணவர்கள் வருவார்கள்' என வீர வசனம் பேசியுள்ளார்.
நான் கேட்கின்றேன். கல்லூரி மாணவர்கள் எல்லோரும் படித்து பெரிய ஆளாக வேண்டியவர்கள். அவர்களை இவர்கள் எப்படி கைப்பாவை ஆக்க முடியும்? அதிலும், '6 மாதத்திற்கு பிறகு எங்களுடைய ரௌடியிஸம் என்னவென தெரியும்' என்று ஆதவ் அர்ஜுனா என பேசி இருக்கிறார். இவர்கள் ரவுடியிஸம் செய்வதற்கு தமிழக மக்கள் என்ன கிள்ளுக்கீரையா?
கரூர் சம்பவத்தில் தவறு நடந்திருக்கிறது. அதற்கு உடனே யார் பொறுப்பு? என்பதை தெரிவித்திருக்க வேண்டும். ஆனந்தா? அதவ் அர்ஜுனாவா? அல்லது விஜயை சுற்றி இருக்கும் வேறு யாராவதா? என சொல்லி இருக்க வேண்டும். அதை விடுத்து. வேறு விதமாக பேசுவது ஏற்புடையதல்ல. இனிமேல் வரக் கூடிய காலத்திலாவது விஜய் விழிப்புடன் இருக்க வேண்டும். அவருடன் இருக்கக் கூடிய சூழ்ச்சியான நபர்களையும் புறம் தள்ள வேண்டும்.
விஜய் தான் குட்டிக் கதைகளை கூறுவார். நான் தற்போது உங்களிடம் ஒரு குட்டிக்கதை சொல்ல விரும்புகிறேன். ஒரு கிணறு இருந்தது. அதில் உல்லாசமாக ஒரு தவளை நீந்தி கொண்டிருந்தது. அப்போது தேள் ஒன்று கிணற்றில் உள்ள தவளை மேல் விழுந்தது. அப்போது தவளை, ''நான் உன்னை காப்பாற்ற மாட்டேன். ஏனெனில் நீ என்னை கொட்டி விடுவாய்'' என்று கூறியது.
அதற்கு பதில் கூறும் விதமாக தேள், ''நான் நிச்சயமாக உன்னை கொட்ட மாட்டேன். கொட்டினால் நீ இறந்து விடுவாய். நீந்த தெரியாமல் நானும் செத்து விடுவேன்'' என்று கூறியது. உடனே இரக்கப்பட்ட தவளை, அந்த தேளை காப்பாற்றியது. ஆனாலும் காப்பாற்றிய தவளையை தேள் கொட்டியது. இது யாருக்கு புரிந்ததோ? இல்லையோ? நிச்சயமாக ஒருவேளை இதனை பார்த்தால் விஜய்க்கு புரியலாம். இனி வரும் காலத்தில் அவர் விழித்துக் கொள்ள வேண்டும்.'' என்று பி.டி.செல்வகுமார் கூறினார்.