மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதல்வராக பதவியேற்றார் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா

மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதல்வராக பதவியேற்றார் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா

மறைந்த அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதலமைச்சராக பதவியே ஏற்றுக்கொண்டார். அவருக்கு, மகாராஷ்டிரா ஆளுநர் ஆச்சார்யா தேவவிரத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சராக இருந்த அஜித் பவார், கடந்த 28 ஆம் தேதி தனது சொந்த தொகுதியான பாராமதிக்கு சென்றபோது விமான விபத்தில் உயிரிழந்தார். மகாராஷ்டிரா அரசியல் வரலாற்றில் அசைக்க முடியாத ஆளுமையாக வலம் வந்த அஜித் பவார் தொடர்ந்து 6 முறை அம்மாநில துணை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவருடைய மறைவுக்கு பிறகு யார் அந்த இடத்தை நிரப்பப் போகிறார்? என்ற கேள்வி எழுந்த நிலையில் அஜித் பவாரின் மனைவியும், மாநிலங்களவை உறுப்பினருமான சுனேத்ரா பவாரை அக்கட்சி ஒருமனதாக துணை முதலமைச்சராக்கி உள்ளது.

அஜித் பவார் இறந்து 3 நாட்களான நிலையில் இன்று அதிகாலை தெற்கு மும்பையில் இருக்கிற தனது கணவரின் இல்லத்திற்கு மகன் மற்றும் மருமகளுடன் சுனேத்ரா (62) வந்தடைந்தார். இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மராட்டிய மாநில அமைச்சருமான சகன் புஜ்பால் கட்சிக் கூட்டத்தில் சுனேத்ராவை துணை முதலமைச்சராக்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

தொடர்ந்து, “எங்களது கட்சியின் தலைமையை சுனேத்ரா பவார் ஏற்றுக்கொள்ள வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம்” என்றார். சுனேத்ராவை துணை முதலமைச்சர் ஆக்குவதற்கான முன்மொழிவை சகன் புஜ்பால், பிரபுல் படேல், சுனில் தட்கரே, ஹசன் முஷ்ரிஃப் ஆகியோர் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸிடம் ஒப்படைத்தனர்.

கணவர் இறந்த துக்கத்திலிருந்தே சுனேத்ரா பவார் இன்னும் மீளவில்லை என்றும், இருப்பினும் மகாராஷ்டிரா மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற அவருடைய விருப்பத்தின் நிமித்தமாக மட்டுமே தற்போது துணை முதலமைச்சராக அவர் பதவியேற்கிறார் என்றும், கட்சியின் மூத்த தலைவர் பிரமோத் இந்துராவ் தெரிவித்துள்ளார்.

அஜித் தாதா நம்மிடம் இல்லை என்பதை இன்னும் எங்களால் ஜீரணிக்க முடியவில்லை. இந்த சமயத்தில் எங்கள் கட்சியின் தொண்டர்களும், மகாராஷ்டிரா மக்களும் சுனேத்ரா தாயாராக இருந்து துணை முதலமைச்சர் பதவியை ஏற்கவேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அதன்படி அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுனில் தட்கரே கூறியுள்ளார்.

சுனேத்ரா பவார் துணை முதலமைச்சராக பதவியேற்பது குறித்து இன்று காலை சரத் பவாரிடம் கேட்டபோது, அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி இருந்தார். இந்நிலையில் மக்களவை ஒப்புதல் பெற்று இன்று (ஜன 31) மாலை 5 மணியளவில் சுனேத்ரா பவார் மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். இதற்காக லோக் பவனில் சிறிய அளவில் நடந்த பதவியேற்பு விழாவில் சுனேத்ரா பவாருக்கு மகாராஷ்டிர ஆளுநர் ஆச்சார்யா தேவவிரத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.