அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மதுபாட்டில்கள்? மருத்துவர் இல்லாததால் கிளம்பிய 'சர்ச்சை'

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மதுபாட்டில்கள்? மருத்துவர் இல்லாததால் கிளம்பிய 'சர்ச்சை'

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், புத்தாண்டு நள்ளிரவில் மதுபான பாட்டில்கள் கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.​

குருந்தம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்த நிலையில், புத்தாண்டு நள்ளிரவில் சிகிச்சைக்காக செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அங்கு மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லை என்றும், இதனால் உடனடி சிகிச்சை கிடைக்கவில்லை என்றும் நோயாளியின் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட வீடியோவும் வெளியிட்டனர். அதில், மருத்துவமனையின் பழைய கட்டடத்திற்குள் விலை உயர்ந்த மதுபான பாட்டில்கள் மற்றும் உணவுப் பொட்டலங்கள் சிதறிக் கிடப்பது பதிவாகி இருந்தது. மேலும், 24 மணி நேரமும் செயல்பட வேண்டிய ஒரு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததும், மது பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டதும் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் மது பாட்டில்கள் கிடந்தது குறித்து பதிலளித்த வட்டார மருத்துவ அலுவலர் ஆல்வின் ஜேம்ஸ், "பழைய கட்டடம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால், கடந்த ஒரு மாதமாகவே மருத்துவ சேவைகள் அனைத்தும் புதிய கட்டடத்திற்கு மாற்றப்பட்டு விட்டன. பழைய கட்டடத்தில் சமூக விரோதிகள் யாரேனும் அத்துமீறி நுழைந்து மது அருந்தியிருக்கலாம். ஆனால் சம்பவம் நடந்த இரவில், ஒரு மருத்துவர், செவிலியர் மற்றும் உதவியாளர் ஆகியோர் பணியில் இருந்துள்ளனர். அன்றிரவு மட்டும் ஆறு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது" என்று விளக்கம் அளித்துள்ளார்.

செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படவில்லை என்றும், போதிய பாதுகாவலர்கள் இல்லை என்றும், அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தினமும் 200-க்கும் மேற்பட்டோர் பயன் பெறும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் மருத்துவர்கள் வருகை குறித்து மாவட்ட நிர்வாகம் விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.