வங்கி ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்: நாடு முழுவதும் சேவை முடங்கியதால் மக்கள் அவதி
வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே வேலைநாட்களாக அறிவிக்கக் கோரி, நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி சேவைகள் முடங்கியதன் காரணமாக பொதுமக்கள் அவதியுற்றனர்.
யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் கூட்டமைப்பின் கீழ் அதிகாரிகளுக்கான சங்கம், ஊழியர்களுக்கான சங்கம் என வங்கித் துறையில் உள்ள அனைத்து 9 சங்கங்களின் சார்பில் நாடு தழுவிய ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று நடைபெற்றது.
வாரத்துக்கு 5 நாட்கள் மட்டுமே வேலைநாட்களாக அறிவிக்கக் கோரும் இந்தப் போராட்டத்தில் இந்தியாவில் உள்ள பொதுத்துறை, தனியார் வங்கிகள், கிராமப்புற, கூட்டுறவு வங்கிகள் என ஒட்டுமொத்தமாக 8 லட்சம் ஊழியர்கள் பங்கேற்றனர்.
கடந்த 24-ம் தேதி (4-வது சனி) மற்றும் ஞாயிறு விடுமுறையைத் தொடர்ந்து 26-ம் தேதி குடியரசு தினத்துக்கும் வங்கிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் தொடர்ந்து 4-வது நாளாக இன்று வேலைநிறுத்தம் காரணமாக பல்வேறு வங்கிகளில் ஊழியர்கள் இல்லாமல் வங்கி சேவைகள் முடங்கின. பண பரிவர்த்தனையும் பாதிக்கப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரிதும் அவதியுற்றனர்.
சென்னையில் பிராட்வே பிரகாசம் சாலையில் உள்ள யூனியன் வங்கி முன்பு அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் உள்ளிட்ட சங்கங்களின் சார்பில் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் 2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.