அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிலை என்ன? - நயினார் நாகேந்திரன் தகவல்

அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிலை என்ன? - நயினார் நாகேந்திரன் தகவல்

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியுடன் கலந்துபேசி ஒருமித்து கருத்துகள் அடிப்படையில் தொகுதிப் பங்கீடு செய்யப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

பட்டுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியது: “தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கவில்லை. அகில இந்திய தலைமை முடிவின்படி, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியுடன் கலந்துபேசி, ஒருமித்து கருத்துக்கள் அடிப்படையில் தொகுதிப் பங்கீடு செய்யப்படும்.

எங்களை பொறுத்தவரை யாரையும், எப்போதும் தீவிரமாக எதிர்ப்பு கிடையாது. கொள்கை அளவில் எதிர்க்கிறோமே தவிர, தனிப்பட்ட முறையில் எந்த தாக்குதலும், எந்த எதிர்ப்பும் யார் மீதும் இதுவரை கிடையாது. இனிமேலும் இருக்காது. தவெகவுக்கு பாஜக ஆதரவு தருகிறது என கூற முடியாது. கரூரில் நடந்த சம்பவம் குறித்து நான் பேசினேன். அதிமுக, பாஜக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். அதற்கு பதில் அளித்த முதல்வர் பேசும்போது, தவெக தலைவர் 12 மணிக்கு வர வேண்டி இருந்தது. ஆனால், 7 மணிக்கு வந்ததால், தண்ணீர், உணவு முறையாக ஏற்பாடு செய்யவில்லை, சிலர் மயக்கத்தில் இருந்தனர் என பேசினார்.

மேலும், 5 டிஎஸ்பி-க்கள் தலைமையில் 500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் இருந்தார்கள் என முதல்வர் கூறினார். 12 மணிக்கு விஜய் வருவதாக இருந்த சூழலில், 7 மணிக்கு வந்ததாக முதல்வர் கூறியதில் உண்மை உள்ளது என நான் பேசினேன். ஆனால், கரூரில் ஒரு போலீஸார் கூட கிடையாது. எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் போலீஸார் பாதுகாப்பு அளிப்பது இல்லை.

தவெக-வில் ஒரு கவுன்சிலர் கூட இல்லை. ஆதவ் அர்ஜூன் பணத்தை வைத்து ஆட்சியை பிடிக்காலம் என நினைக்கிறார். கூட்டம் கூட்டி விடலாம். அதையும் தாண்டி மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும். ஆட்சிக்கு வர வேண்டும். தமிழகத்தில் 10 வயது சிறுமி முதல் 70 வயது முதியவர் கூட விட்டு வைப்பது இல்லை. திமுக ஆட்சியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைகள், பள்ளி வாசலில் கஞ்சா விற்பனை நடக்கிறது. போலீஸாருக்கு யாரும் பயப்படுவது கிடையாது. காவலர் குடியிருப்பில் புகுந்து வெட்டியுள்ளனர். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பது மக்களுக்கு தெரியும்” என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.