தேசிய ஊரக வேலை திட்டத்தில் அதிமுக நிலைப்பாடு இதுதான்... ஜெயக்குமார் பேட்டி
தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் அதிமுக நிலைப்பாடு என்ன என்பது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் இருந்த மகாத்மா காந்தி என்ற பெயரை மத்திய அரசு நீக்கி, புதிய பெயரை வைத்துள்ளது. இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், பாஜகவின் கூட்டணிக் கட்சியான அதிமுகவின் நிலைப்பாடு குறித்து மூத்த தலைவர் ஜெயக்குமார் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:
மகாத்மா காந்தியின் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பெயரில் மகாத்மா காந்தி பெயரை நீக்கக் கூடாது. அதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. இதை தெளிவாக சொல்லிவிட்டோம். 100 நாள் வேலைத் திட்டம் கிராமப்புற மக்களுக்கானது.
அதை சிதைக்காமல் உள்ளது உள்ளபடியே இருந்தால் விவசாய தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள். எனவே, இத்திட்டத்தில் எந்தவிதமான கெடுபிடிகளையும் மத்திய அரசு புகுத்தக் கூடாது. மகாத்மா காந்தியின் பெயரிலேயே இத்திட்டம் தொடர வேண்டும்
இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.