ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்து சாதனை படைத்த இந்தியா!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் 339 ரன்கள் என்ற கடினமான இலக்கை வெற்றிகரமாக அடைந்ததன் மூலம், இந்திய மகளிர் அணி சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்த அணி என்ற புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது
நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த மகளிர் உலகக் கோப்பை தொடரின் பரபரப்பான போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியதுடன், கோப்பையை வெல்லும் வாய்ப்பையும் பெற்றுள்ளது.
இந்திய அணிக்காக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெமிமா ரோட்ரிக்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 127 ரன்களையும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 89 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர். இந்த போட்டியில் அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆட்டநாயகி விருதையும் வென்றார். ரசிகர்களுக்கு விருந்து படைத்த இந்த போட்டியில் பல சாதனைகளும் முறியடிக்கப்பட்டன. அவற்றை இப்பதில் பார்ப்போம்.
இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி 339 ரன்கள் என்ற இலக்கை வெற்றிகரமாக அடைந்ததன் மூலம், சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச இலக்கை சேஸிங் செய்த அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது. முன்னதாக ஆஸ்திரேலிய அணி லீக் சுற்றின் போது இந்தியாவுக்கு எதிராக 331 ரன்கள் என்ற இலக்கை சேஸிங் செய்ததே சாதனையாக இருந்த நிலையில், அதனை தற்சமயம் இந்தியா முறியடித்துள்ளது. மேலும், ஒருநாள் உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில்(ஆடவர்-மகளிர்) ஒரு அணி 300 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களைச் சேஸிங் செய்தது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.