சஞ்சார் சாத்தி செயலி வேண்டாம் எனில் டெலீட் செய்யலாம்: மத்திய அரசு
சஞ்சார் சாத்தி செயலி வேண்டாம் என்றால் பயனர்கள் அதனை டெலீட் செய்துகொள்ளலாம் என்று மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
சைபர் பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய அரசு பிரத்தேயகமாக உருவாக்கியுள்ள சஞ்சார் சாத்தி செயலியை புதிய செல்போன்களில் கட்டாயம் நிறுவ வேண்டும் என்று ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சஞ்சார் சாத்தி செயலியை புதிய போன்களில் நிறுவிய பிறகே விற்பனைக்கு அனுப்ப வேண்டும் என்றும், ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இதனை 90 நாட்களுக்குள் உறுதி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது மக்களை உளவு பார்க்கும் முயற்சி என அவை விமர்சித்துள்ளன. சஞ்சார் சாத்தி பிரச்சினை குறித்து விவாதிக்க பிற அலுவல்களை ஒத்திவைக்கக் கோரி மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர் ரேணுகா சவுத்ரி, மாநிலங்களவையில் ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.
இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, “சஞ்சார் சாத்தி செயலியை ஒருவர் தனது ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புதிதாக வர உள்ள ஸ்மார்ட்போன்களில் அந்த செயலி இருக்கும். வேண்டும் என்போர் அதனை அப்படியே வைத்துக்கொள்ளலாம். வேண்டாம் என நினைப்பவர்கள் அதனை டெலீட் செய்யலாம். இது பயனர்களின் முடிவுக்கு உட்பட்டது.
இந்த செயலியை அனைவருக்கும் அறிமுகப்படுத்துவது அரசின் கடமை. அதை தங்கள் ஸ்மார்ட்போனில் வைத்திருப்பதாக இல்லையா என்பது பயனர்களின் முடிவைப் பொறுத்தது. விற்கப்படும் போன்கள் முறைப்படியானதா என்பதை சரிபார்க்கவும், போன் தொலைந்து போனால் அதனை கண்காணிக்கவும் இந்த செயலியை அரசாங்கம் ஒரு வழிமுறையாக முன்மொழிந்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த பாஜக எம்பி சஷாங்க் மணி, “நான் ஐஐடியில் படித்தவன். எனவே, எத்தகைய சைபர் தாக்குதல்கள் நடக்கின்றன என்பதை நான் புரிந்து கொள்கிறேன். இந்த செயலி (சஞ்சார் சாத்தி) மக்களின் பாதுகாப்பு உணர்வை அதிகரிக்கும். நமது மொபைல் போனில் உள்ள தரவுகள் இதனால் கசியாது. அதோடு, டிஜிட்டல் முறையில் குடிமக்களின் பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்படும். இதை நான் வரவேற்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்த புதிய செயலி குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி சசி தரூர், “அரசாங்கம் முன்வைக்கும் வாதத்தை இன்னும் விரிவாக ஆராய வேண்டும். உத்தரவுகளைப் பிறப்பிக்கும் முன்பாக அரசாங்கம் பொதுமக்களுக்கு எல்லாவற்றையும் விளக்க வேண்டும். இந்த முடிவின் பின்னணியில் உள்ள கருத்தை அரசாங்கம் விரிவாக தெரிவிக்கும் வகையில் விவாதம் நடத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.