‘லிவ்-இன் ரிலேஷன்ஷிப்’ இளம் பெண்ணை ஏமாற்றிய இளைஞர்: நீதிமன்றம் முக்கிய உத்தரவு

‘லிவ்-இன் ரிலேஷன்ஷிப்’ இளம் பெண்ணை ஏமாற்றிய இளைஞர்: நீதிமன்றம் முக்கிய உத்தரவு

திருமணம் செய்வதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய இளைஞரின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மணப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். திருமணம் செய்வதாக கூறி பாலியல் உறவு கொண்டு இளம் பெண்ணை ஏமாற்றியதாக இவர் மீது மணப்பாறை அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி பிரபாகரன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அஜரான வழக்கறிஞர், "மனுதாரரும், அவர் மீது புகார் அளித்த பெண் செவிலியரும் பள்ளி காலத்திலிருந்து காதலித்து வந்துள்ளனர். மனுதாரர் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து பெண்ணுடன் 2019ம் ஆண்டிலிருந்து பாலியல் உறவு கொண்டுள்ளார். இருவரும் வேறு வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலை பெற்றோர் ஏற்கவில்லை.

இதனால் இருவரும் திருமணம் செய்வதற்காக வீட்டை விட்டு வெளியேறி திருச்சியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். பெண்ணின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்ததால் பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்த விட்டுச் சென்றுள்ளார். பின்னர் பெண்ணை திருமணம் செய்ய மறுத்துள்ளார்.

விசாரணையின் போது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக பிரபாகரன் தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டதால் அவரை கைது செய்ய தடை விதித்து வழக்கு சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கு உடன்பாடு ஏற்படவில்லை. மீண்டும் விசாரணைக்கு வந்த போது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக உறதிமொழி பத்திரம் தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி அவர் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்யவில்லை. எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது" என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி ஸ்ரீமதி, "மனுதாரர் திருமணம் செய்வதாக உறுதியளித்து பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டுள்ளார். பின்னர் ஏமாற்றியுள்ளார். இப்போதும் திருமணம் செய்ய மறுத்து வருகிறார். தற்போது பெருகி வரும் ‘லிவ்-இன் ரிலேஷன்ஷிப்’ முறையில் பாதிக்கப்பட்டவர்களாக பெண்கள் உள்ளனர். பெண்கள் நவீனத்துவம் மற்றும் கலாச்சாரம் என்ற வலையில் சிக்கிக்கொள்கின்றனர். இந்த உறவில் இருக்கும் ஆண்கள் திடீரென்று பெண்களின் குணநலன்களைக் குற்றம்சாட்டி ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்.

இந்த வழக்கில் நீதிமன்றம் இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் செய்ய முயன்றது. திருமணம் ஒரு தீர்வாக அமையாத போது, ஜீவனாம்சம் அல்லது பாதிக்கப்பட்டவருக்கான இழப்பீடு வழங்குவதன் மூலம் இந்த சிக்கலைத் தீர்க்க நீதிமன்றம் முயன்றது.

ஜீவனாம்சம் அல்லது பாதிக்கப்பட்டவருக்கான இழப்பீட்டை வழங்கும் போது, பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வேண்டும். இருப்பினும் பாதிக்கப்பட்ட பெண், அதற்கு உடன்பட்டால் பணத்திற்காக உறவு கொண்டதாக முத்திரை குத்திவிடுவார்கள் என்று கூறி மறுத்து விட்டார். பெண்ணின் இந்த நடவடிக்கை பிரச்சினையின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது.

திருமணம் சாத்தியமில்லை என்றால் சம்பந்தப்பட்ட ஆண்கள் சட்ட விதிகளின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டும். இப்போது பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் பிரிவாக பிஎன்எஸ் பிரிவு 69 உள்ளது. இந்த வழக்கில் திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் உறவு கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணை மனைவியாக அங்கீகரிக்க உரிமை உண்டு.

இருப்பினும் மனுதாரர் திருமணம் செய்ய மறுக்கிறார். இதனால் மனுதாரர் மீது பிஎன்எஸ் சட்டத்தின் பிரிவு 69-இன் கீழ் வழக்குப் பதிய வேண்டும். மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதால் மனுதாரரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டியது அவசியம். எனவே மனுதாரரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என உத்தரவிட்டார்.