அதிமுகவில் இணைந்த நாதக முக்கிய பொறுப்பாளர்கள் - காரணம் என்ன?

அதிமுகவில் இணைந்த நாதக முக்கிய பொறுப்பாளர்கள் - காரணம் என்ன?

நாதக மாநில மருத்துவ அணி செயலாளர் ஐசக் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்கள், கட்சியில் இருந்து விலகி, ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சுகுமார் தலைமையில் இணைந்தனர்.

2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், பல்வேறு கட்சிகள் தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளன. அதிமுக, பாஜக, தவெக, நாதக உள்ளிட்ட கட்சிகள் தமிழகம் தேர்தல் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பூத் கமிட்டி கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே, பாஜக - அதிமுக கூட்டணி அறிவித்து பிராசாரத்தை தொடங்கியுள்ளன. நாதக, தவெக போன்ற கட்சிகள் பொதுக்கூட்டங்கள் மற்றும் மாநாடுகள் நடத்தி வருகின்றன. இதில், சில கட்சிகள் தேர்தல் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது.

அந்த வகையில், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் பொதுக்கூட்டங்கள் நடத்தி மக்களை சந்தித்து வருகிறார். இந்த நிலையில், நாதகவில் இருந்த முக்கிய பொறுப்பாளர்கள் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்சியில் இருந்து விலகியுள்ளது நாதகவில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாதகவின் முக்கிய பொறுப்பாளர்களான மாநில மருத்துவ அணி செயலாளர் ஐசக், ஆற்காடு மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், நரசிங்கபுரம் ஊராட்சி நிர்வாகிகள் மணிகண்டன் மற்றும் பிரவீன்குமார் ஆகியோர், தங்களது கட்சி பொறுப்புகளில் இருந்து விலகி, இன்று (அக்.21) அதிமுகவில் இணைந்துள்ளனர். இவர்கள் 4 பேரும், ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சுகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், அதிமுகவில் இணைந்தனர்.

இது குறித்து அதிமுக மாவட்ட செயலாளர் சுகுமார் கூறுகையில், “அதிமுக மக்கள் நலத்துக்காக மட்டுமே செயல்படும் உண்மையான அரசியல் இயக்கம். நாதகவில் இருந்து விலகி அதிமுகவில் சேரும் தலைமைப் பொறுப்பாளர்கள், எதிர்காலத்தில் நம் கட்சியின் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் முழு உழைப்பையும் அர்ப்பணிப்பார்கள் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.

தொடர்ந்து, அதிமுகவில் இணைந்த உறுப்பினர்கள் கூறுகையில், “ நாதகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் அமைப்பு தோல்விகள் காரணமாக, நாங்கள் எதிர்பார்த்த மக்கள் நல அரசியலை அங்கு முன்னெடுக்க இயலவில்லை. ஆனால், அதன் அடித்தளத்தை வலிமையாக கொண்டு செயல்படும் கட்சி அதிமுக என நாங்கள் உணர்ந்தோம். அதனால், பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையுடன் செயல்படும் அதிமுகவுடன் இணைவதற்கான முடிவை எடுத்துள்ளோம்.

அதிமுக நீண்டகால அனுபவமும், தெளிவான நிர்வாக அமைப்பும் கொண்ட ஒரு மக்கள் பாசறை. அதனால், நாங்கள் எண்ணிய மக்கள் நல அரசியலை பாசறையாய் கொண்ட இயக்கத்தில் இணைவதற்காக உறுதியுடன் இந்த முடிவை எடுத்துள்ளோம்” என தெரிவித்தனர்.