கரூர் சம்பவத்தில் நீதிமன்ற வழிகாட்டுதல் படி நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் உறுதி

கரூர் சம்பவத்தில் நீதிமன்றம் வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: கரூர் துயரம் குறித்து உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள், வழிகாட்டுதல்கள் அனைத்தையும் தமிழக அரசு மிகத் தீவிரமாக கவனத்தில் கொண்டு செயலாற்றி வருகிறது.
கரூரில் நடந்த துயரத்தால் நாம் அனைவருமே நெஞ்சம் கலங்கிப் போயிருக்கிறோம். தம் அன்புக்குரியோரை இழந்து தவிக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் கண்ணீரையும் கண்டு தவிக்கிறேன். உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு தனது விசாரணையைத் தொடங்கும்.
இதன் மூலம், முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவோம் என்று மாநிலத்தின் முதல்வராக மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். அனைத்து மட்டங்களிலும் பொறுப்பு உறுதி செய்யப்படும்.