திமுகவின் பி டீம் ஆக செயல்பட்ட துரோகிகளால்தான் கடந்த தேர்தலில் தோற்றோம்! - ஈபிஎஸ் காட்டம்
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுகவின் பி டீம் ஆக செயல்பட்ட துரோகிகளால்தான் அதிமுக தோற்றது. திமுக ஆட்சிக்கு வரும் என்று சொன்னவர்கள் எப்படி அதிமுகவாக இருக்க முடியும்? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று (அக்.30) தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். அதையடுத்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்தும், அதிமுக பிளவு குறித்தும் பேசினார். அப்போது, “நெல் மூட்டைகளை போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்ய வேண்டும் என்று சட்டமன்றத்தில் நான் வலியுறுத்தினேன்.
ஆனால் அமைச்சரோ, ஞாயிற்றுக்கிழமைகூட கொள்முதல் செய்யப்படுவதாக கூறுகிறார். அதேநேரத்தில் நெல்மணிகள் முளைத்து பெரும் நஷ்டத்திற்குள்ளாகி இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள். துணை முதலமைச்சர் டெல்டா மாவட்டத்திற்குச் சென்றபோது, விவசாயிகளிடம் இதுகுறித்து கேட்டறிவார் என எதிர்பார்த்தேன். ஆனால் அவர் சரக்கு ரயில்களில் ஆய்வு செய்து கொடியசைத்துவிட்டு வந்துவிட்டார்.
இதுகுறித்து கேட்டால் முதல்வரோ, ஆண்டுக்கு 42.5 லட்சம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதாக பொய் சொல்கிறார். கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்ட நெல்மணிகள் முளைத்திருப்பது குறித்து பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அப்படியென்றால் நீங்கள் போட்ட செய்திகள் எல்லாம் பொய்யானவையா?” என செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து வாக்காளர் சிறப்பு பட்டியல் திருத்தம் குறித்து பேசிய அவர், “சார் என்றாலே திமுகவிற்கு அலர்ஜி. பலமுறை அதிகாரிகளிடம் இறந்தவர்களின் பட்டியல், குடியிருப்பில் இல்லாதவர்களின் பட்டியல் கொடுக்கப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நீதிமன்றத்திற்கு சென்று ஆர்.கே நகரில் மட்டும் 36 ஆயிரம் பேரை நீக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. கரூரிலும் நீதிமன்றத்தின் மூலம் 10 ஆயிரம் வாக்குகள் நீக்கி இருக்கிறோம்.
அதேபோல், 2023ஆம் ஆண்டே ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில், குடிசை மாற்று வாரியத்தில் உள்ள வீடுகள் இடிக்கப்பட்டு விட்டன. ஆனால் அங்கு குடியிருப்பதாக பட்டியல் தயராகி இருக்கிறது. இதுபோன்ற நிலைமைகள் மாற எஸ்ஐஆர் தேவை” என்றார்.
இதையடுத்து ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “இவர்களுடைய சந்திப்பால் அதிமுக பலவீனமடையாது. இவர்கள் மூவரும் செய்தியாளர்களை சந்தித்தது ஏற்கனவே போட்ட திட்டம்தான். இன்று நேற்றா திட்டம் போடுகிறார்கள்? இப்படிப்பட்ட துரோகிகளால்தான், 2021-ல் ஆட்சிக்கு வர முடியவில்லை.
2 நாட்களுக்கு முன்புகூட திமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று ஓபிஎஸ் சொன்னார். இவரா அதிமுககாரர்? இவரா அதிமுகவை ஒருங்கிணைப்பவர்? இவர்கள் எல்லாம் திமுகவின் பி டீமாக செயல்படுகிறார்கள்” என்று ஈபிஎஸ் காட்டமாக பதிலளித்தார்.
செங்கோட்டையன் மீதான நடவடிக்கை குறித்து கேட்டதற்கு, அதிமுக தலைமையின் கருத்தை முழுமையாக கடைபிடிக்காவிட்டால், யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.