‘ரஜினி 173’ -ஐ இயக்குகிறார் சிபி சக்ரவர்த்தி; இசை அனிருத்!

‘ரஜினி 173’ -ஐ இயக்குகிறார் சிபி சக்ரவர்த்தி; இசை அனிருத்!

ரஜினி நடிக்கவுள்ள 173-வது படத்தின் இயக்குநர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவிவந்த நிலையில், அதனைத் தயாரிக்கும் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், ‘ரஜினி 173’ -ஐ இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்துக்காக தொடர்ச்சியாக கதைகள் கேட்கும் படலத்தில் ராஜ்கமல் நிறுவனமும், ரஜினியும் ஈடுபட்டனர்.

இதன் இயக்குநர் யார் என்பது குறித்த அறிவிப்பினை இன்று காலை 11 மணியளவில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருப்பதாக அறிவித்தது. இதனால், ரஜினி 173 மீது எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. சரியாக 11 மணிக்கு அறிவிப்பும் வெளியானது. ஆனால், யாரும் அதிகம் கணிக்காத சிபி சக்ரவர்த்தி இயக்குநராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ரஜினி தற்போது ’ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் . அதனை முடித்துவிட்டு கமல் தயாரிக்கும் தனது 173-வது படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார். அதன் இயக்குநரும் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி 173 -ஐ தொடர்ந்து ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படம் தொடங்கும் எனத் தெரிகிறது. இப்படத்தினை நெல்சன் இயக்குவது உறுதியாகி இருக்கிறது.