புத்தாண்டை வாணவேடிக்கை கொண்டாட்டத்துடன் உற்சாகமாக வரவேற்ற மக்கள்!
2026ஆம் ஆண்டு பிறந்துள்ளது. இந்தப் புதிய 2026ஆம் ஆண்டு இனிய ஆண்டாக அமைய வேண்டும் என்ற விருப்பத்துடன் மக்கள் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.
சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலை உள்ளிட்ட இடங்களில் மக்கள் திரண்டு புத்தாண்டை உற்சாகத்துடன் வரவேற்றனர். மகிழ்ச்சியும் மன நிறைவும் ஒவ்வொருவரின் உள்ளங்களிலும், இல்லங்களிலும் நிறையட்டும் என ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்தப் புத்தாண்டை வரவேற்றுள்ளனர். வண்ணமயமான வானவேடிக்கைகளுடன் புத்தாண்டை மக்கள் வரவேற்றுள்ளனர். புத்தாண்டை கொண்டாட பல்வேறு கலை நிகழ்ச்சிகளிலும் முக்கிய நகரங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நாடாக உலகமே புத்தாண்டை கொண்டாடி வருகிறது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் பொதுமக்கள் வாணவேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்றுள்ளனர். சென்னையில் மெரினா காமராஜர் சாலை, பெசண்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தங்கும் விடுதிகள், பண்ணை வீடுகளிலும் புத்தாண்டு நிகழ்ச்சிகள் ஆடல் பாடலுடன் நடைபெற்றது. மால்கள், பூங்காக்களிலும் புத்தாண்டை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வரவேற்றுள்ளனர்.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்கு போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி இருந்தனர். உயிரிழப்பு இல்லா புத்தாண்டு கொண்டாட்டத்தை உறுதி செய்வதற்காக, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். சென்னை மாநகர் முழுவதும் பாதுகாப்புக்காக 19 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்களுக்கு உதவியாக சுமார் 1,500 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். மெரினா உள்ளிட்ட கடற்கரை சாலைகளில் இன்று இரவு 7 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 425 இடங்களில் வாகன தணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னையில் உள்ள 25 மேம்பாலங்களும் இன்று இரவு மூடப்பட்டன. பைக் ரேஸ், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட செயல்களை தடுக்க காவல்துறை சார்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சென்னை மெரினா கடற்கரை சாலையில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும், மணிக்கூண்டில் ஒலி எழுப்ப, 'ஹேப்பி நியூ இயர்' என்று உற்சாகம் பொங்க கோஷம் எழுப்பிய இளைஞர்கள், பொதுமக்கள், சிறுவர்கள், ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தனர்