கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் மீண்டும் ஆஜராக விஜய்க்கு சிபிஐ சம்மன்? நிர்மல் குமார் பதில்
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான வழக்கில், தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன் வழங்கவில்லை என அக்கட்சி நிர்வாகி நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டார். அந்த வகையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமல்லாமல், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவு படி சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் தவெக நிர்வாகிகளான என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, சி.டி. நிர்மல் குமார் உள்ளிட்டோரை டெல்லிக்கு நேரில் அழைத்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். சம்மனை தொடர்ந்து கடந்த 12 ஆம் தேதி நேரில் ஆஜரான விஜய்யிடம் 8 மணி நேரத்திற்கு மேலாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் நிர்வாகி நிர்மல் குமார், "இந்த வழக்கில் மீண்டும் ஆஜராக வேண்டும் என தவெக தலைவர் விஜய்யிடம் சிபிஐ இதுவரை எவ்வித சம்மனும் வழங்கவில்லை. நாங்கள் விசாரணை அமைப்புக்கு ஒத்துழைப்பு தர எப்போதும் தயாராக இருக்கிறோம். எனவே, சிபிஐயின் நடவடிக்கைக்கு எங்களின் முழு ஒத்துழைப்பு இருக்கும்" என்றார்
தொடர்ந்து பேசிய அவர், "கரூரில் நடைபெற்ற உயிரிழப்புக்கு யார் காரணம் என்று அனைவருக்கும் தெரியும். மத்திய உள்துறை அமைச்சரை மேடையில் வைத்துக் கொண்டே செந்தில் பாலாஜி தான் உயிரிழப்புக்கு காரணம் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். எங்களை பொறுத்த வரையில் விசாரணை முறையாக நடத்தப்பட வேண்டும். குற்றவாளிகள் நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்" என்றார்.