குத்துச்சண்டையில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவர்: நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்த ஆட்சியர்

குத்துச்சண்டையில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவர்: நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்த ஆட்சியர்

பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் முதலிடம் பெற்ற மாணவர் கமலேஷை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கமலேஷ். இவர் குன்றத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுவயதில் இருந்தே குத்துச்சண்டை போட்டியில் ஆர்வம் கொண்ட கமலேஷ், அதற்கான முறையான பயிற்சியையும் எடுத்து வந்துள்ளார்.

இதன் மூலம் அவர் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்றுள்ளதுடன், அதில் பதக்கங்களையும் வென்று அசத்தியுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் பாரதியார் பிறந்தநாளை ஒட்டி தேனியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற குத்து சண்டை போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

இதில் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகள் சார்பாக கமலேஷ் கலந்து கொண்டார். இதில் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்ட கமலேஷ், இறுதிப் போட்டிக்கும் முன்னேறி இருந்தார். அதன்பின் இறுதிப் போட்டியிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தினார்.

இதன் மூலம் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் குத்துச்சண்டை போட்டியில் மாநில சாம்பியன் பட்டம் வென்ற முதல் மாணவர் என்ற பெருமையையும் கமலேஷ் பெற்றுள்ளார். இதனையடுத்து, குத்துச்சண்டை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கம்லேஷை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் இன்று நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

மேற்கொண்டு மாணவரின் சாதனையை பாராட்டி தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார். அப்போது மாணவர் கமலேஷ், குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை காண்பித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து மாணவனிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், ‘விளையாட்டை போலவே படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும்’ என்று அறிவுரை வழங்கினார்.

இந்த நிகழ்வின் போது குத்துச்சண்டையில் சாம்பியன் பட்டம் பெற்ற மாணவர் கமலேஷின் பெற்றொர்கள் முருகன் மற்றும் ராஜேஸ்வரி ஆகியோரும் உடனிருந்தது குறிப்பிடத்தக்கது.