இறந்து கிடக்கும் நாய்களை தேடி செல்லும் அரசு ஊழியர்; குவியும் பாராட்டு!

இறந்து கிடக்கும் நாய்களை தேடி செல்லும் அரசு ஊழியர்; குவியும் பாராட்டு!

தேனி மாவட்ட சாலையோரங்களில் இறந்து கிடக்கும் நாய்களை ஆழ குழி தோண்டி, கிருமி நாசினிகள் தெளித்து, முறையாக அடக்கம் செய்து வரும் அரசு ஊழியரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் சாலையோரங்களில் சுற்றித்திரியும் நாய்கள் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படுத்தியும், வாகனங்களில் அடிபட்டு இறந்து கிடப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இவ்வாறு இறந்த நாய்கள் ஆங்காங்கே அப்புறப்படுத்தப்படாமல் கிடப்பதால் கடுமையான துர்நாற்றம் வீசி பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் விபத்தில் அடிபட்டு கிடக்கும் நாய்களை அடக்கம் செய்வதற்கு தேனியைச் சேர்ந்த அரசு ஊழியர் ரஞ்சித் குமார் என்பவர் முன்வந்துள்ளார். தேனி, கா.நா விளக்கு அருகே உள்ள மா.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுநராக பணியாற்றி வருபவர் ரஞ்சித் குமார்.

இவர், தனது பணி நேரம் போக மற்ற நேரங்களில் பொதுமக்களின் அழைப்பை ஏற்று, சாலையோரங்களில் அடிபட்டு துர்நாற்றம் வீசியபடி இறந்து கிடக்கும் நாய்களை மூன்றடி ஆழ குழி தோண்டி கிருமி நாசினிகள் தெளித்து முறையாக அடக்கம் செய்து வருகிறார். கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 80க்கும் மேற்பட்ட நாய்களை இவர் அடக்கம் செய்துள்ளார். பணி நேரம் போக மற்றும் நேரங்களில் பொது மக்களின் அழைப்பை ஏற்று, தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று இது போன்ற சமூக சேவை செய்து வருகிறார்.

இதுகுறித்து ரஞ்சித் குமார் கூறுகையில், ''சாலையோரங்களில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் நாய்கள் ஒன்று கூடி சாலையோரங்களில் பொதுமக்களின் வாகனங்களில் விபத்து ஏற்படுத்தி, அடிபட்டு இறந்து விடுகின்றன. எனவே தமிழக அரசு சாலை ஓரங்களில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளை தடுப்பதற்கு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுஇடங்களில் சுற்றித் திரியும் நாய்களை மாவட்டம்தோறும் காப்பகங்களை ஏற்படுத்தி, பிடித்து பராமரித்து, நாய்களின் இனப்பெருக்க கருத்தடை செய்ய வேண்டும்.

தனி ஒரு மனிதனாக பொதுமக்களின் தகவலின் அடிப்படையில் சாலையோரங்களில் இறந்து கிடக்கும் நாய்களை முறையாக அடக்கம் செய்து வருகிறேன். கடந்த ஆண்டில் மட்டும் 80 நாய்களை அடக்கம் செய்துள்ளேன். தகவல் கிடைக்காத இன்னும் பல்வேறு பகுதிகளில் இது போன்று நாய்கள் இறந்து துர்நாற்றம் வீசி பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வருகின்றன. இதற்கு தமிழக அரசு மாவட்டதோறும் குழு ஏற்படுத்தி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வரும் இறந்த நாய்களை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்று ரஞ்சித் குமார் கோரிக்கை வைத்துள்ளார்.