டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு வழக்கு: அல் பலா பல்கலை. நிறுவனருக்கு 14 நாள் நீதிமன்ற காவல்
டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அல் பலா பல்கலைக்கழக நிறுவனர் ஜவாத் அகமது சித்திக்கியை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில், குண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்த காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர் உமர் நபி, அல் பலா பல்கலைக்கழகத்தின் மருத்துவ பேராசிரியர் என்பதால், இந்த விவகாரத்தில் பல்கலைக்கழகத்துக்கு உள்ள தொடர்பு குறித்து என்ஐஏ விசாரித்து வருகிறது.
சித்திக்கி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவருக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகள் மற்றும் கண் கண்ணாடி ஆகியவை கிடைக்க அனுமதிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, சித்திக்கிக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகள் குறித்த விவரங்களை நீதிபதியிடம் அமலாக்கத் துறைஅளித்தது.
சித்திக்கின் நீதிமன்றக் காவல் டிச.15ம் தேதி முடிவடையும் என்பதால் அன்றைய தேதிக்கு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.