வெளிநாட்டு லீக்கில் இந்திய வீரர்கள்: ரவி சாஸ்திரி யோசனை

இந்திய வீரர்களை வெளிநாடுகளில் நடைபெறும் லீக்குகளில் விளையாட அனுமதிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
இந்திய வீரர்கள் வெளிநாட்டு டி20 கிரிக்கெட் லீக்குகளில் விளையாடுவதை பிசிசிஐ தடை செய்துள்ளது. அனைத்து வகையான உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்று, வாரியத்திடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற்ற பின்னரே இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெளிநாடுகளில் விளையாட முடியும்.
இந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின், சமீபத்தில் பிக்பாஷ் டி20 தொடரில் இணைந்த முதல் உயர்மட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ஆனார். வரவிருக்கும் சீசனுக்காக அவர், சிட்னி தண்டர் அணியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறியதாவது: இந்தியா ஒரு பெரிய நாடு, அனைவருக்கும் விளையாட வாய்ப்பு கிடைப்பதில்லை, எல்லோராலும் அதை சாதிக்க முடியாது. டெஸ்ட் அணியில் இடம் பெற முடியாவிட்டாலோ, சி அல்லது டி ஒப்பந்தத்தை பெற முடியாவிட்டாலோ ஏன் பிக் பாஷ் லீக்கில் விளையாடுவதைத் தடுக்க வேண்டும்.
ஐபிஎல் தொடரில் பல இளம்வீரர்களுக்கு உயர்தர வீரர்களுடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பும், அனுபவமும் கிடைப்பதை போன்று வெளிநாட்டில் விளையாடிவிட்டு திரும்பிவரும் போது இந்திய வீரர்களுக்கு கிடைக்கும் அனுபவம் உதவும். அவர்கள் அழுத்தத்தைக் கையாளக் கற்றுக்கொள்வார்கள். கூடுதலாக, அவர்கள், ரிக்கி பாண்டிங்,ஸ்டீபன் பிளெமிங் போன்ற பெரிய சர்வதேச நட்சத்திரங்களுடனும், சர்வதேச வீரர்களுடனும் இணைந்து பணியாற்ற முடியும்.
இது ஒரு பாடம். என்னை பொறுத்தவரையில் வெளிநாடுகளில் விளையாடுவதைவிட சிறந்த பாடம் எதுவும் இல்லை. அந்த அனுபவம் கிரிக்கெட் அடிப்படையில் மட்டுமல்ல, வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் முறைகளை புரிந்துகொள்வதிலும் பலன் கிடைக்கும். நீங்கள் பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும். மேற்கிந்திய தீவுகள் அணியின் பயிற்சி முறை ஆஸ்திரேலிய பயிற்சி முறையிலிருந்து வித்தியாசமாக இருக்கும். இவ்வாறு ரவி சாஸ்திரி கூறினார்.