புதிய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு' - காலவரையற்ற போராட்டத்தை வாபஸ் பெற்ற அரசு ஊழியர்கள்

புதிய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு' - காலவரையற்ற போராட்டத்தை வாபஸ் பெற்ற அரசு ஊழியர்கள்

புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதற்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன. மேலும் ஜனவரி 6 ம் தேதி அறிவிக்கப்பட்ட காலவரையற்ற போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும் அறிவித்துள்ளன.

பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், ஒருங்கிணைந்த திட்டம் ஆகியவை குறித்து ஆய்வு செய்வதற்காக ஊரக வளர்ச்சி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழு தனது முழு அறிக்கையை தமிழக அரசுக்கு கடந்த வாரம் வழங்கியது.

இந்நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஜனவரி 6 ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொகுப்பு ஊதியம், பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்நரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி அமைச்சர்கள் குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இந்நிலையில் நேற்று தலைமைச்செயலகத்தில் ஜாக்டோ ஜியோ மற்றும் போட்டோ ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக, பழைய ஓய்வூதிய திட்டப் பலன்களை வழங்கக் கூடிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.

முதலமைச்சரின் அறிவிப்புக்கு பின்னர் தலைமைச் செயலக ஊழியர்கள் சங்க தலைவர் வெங்கடேசன் மற்றும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள், ''தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை முதல்வர் அறிவித்திருப்பதன் மூலம் எங்களின் 23 ஆண்டு கால போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது.

புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் கொண்டு வந்த முதல்வருக்கு நன்றி. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் அரசு ஊழியர்களுக்கு கடைசி மாத ஊதியத்தில் 50% ஓய்வூதியமாக கிடைக்கும். பணிக் காலத்தை நிறைவு செய்யாமல் ஓய்வு பெற்றாலும் குறைந்தபட்ச ஓய்வூதியம் கிடைக்கும்.

மேலும் அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் அறிவிப்பு நிதியாண்டிலேயே செயல்பாட்டுக்கு வரும். மற்ற கோரிக்கைகளும் ஜனவரி மாதத்திற்கு உள்ளாக நிறைவேற்றப்படும் என அறிவித்துள்ளதால் வரும் ஜனவரி 6 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட காலவரையற்ற போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது'' என்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.