திருமணத்திற்கு பின் 'இன்ஸ்டா' காதல் - விடுதி அறையில் பிணமாகக் கிடந்த பெண்

திருமணத்திற்கு பின் 'இன்ஸ்டா' காதல் - விடுதி அறையில் பிணமாகக் கிடந்த பெண்

திருமணத்தை மீறிய உறவில் இருந்த காதலன், இன்ஸ்டாகிராம் காதலியை விடுதிக்கு வரவழைத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சேலம் இரும்பாலை பகுதியைச் சேர்ந்த எலெக்ட்ரீசியன் தொழில் செய்யும் கோவிந்தசாமியின் மகன் பார்த்திபன் (35), தருமபுரி ஏர்கோல்பட்டியை சேர்ந்த சாலா (33) என்ற திருமணமான பெண்ணுடன், இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், இருவரும் தனியாக சந்திக்க திட்டமிட்டபடி, நேற்று மாலை சுமார் 5 மணியளவில் ஏற்காட்டில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் பார்த்திபன் அறை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, சாலாவை தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு பார்த்திபன் விடுதிக்கு சென்றுள்ளார். பின்னர், இரவு சுமார் 11 மணியளவில், விடுதியின் வரவேற்பறையில் இருந்தவர்களிடம், கடைக்கு சென்று வருவதாகக் கூறி, பார்த்திபன் வெளியே சென்றதாக விடுதி பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், பார்த்திபன் வெளியே சென்ற பின், திரும்பி வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், விடுதி பணியாளர்கள் அவரை அலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்த போது, ‘போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது’ என்று வந்துள்ளது.

இதனால், சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள், காலை 6 மணியளவில் பார்த்திபன் எடுத்திருந்த அறையில் கதவை தட்டிப் பார்த்துள்ளனர். வெகுநேரமாகியும் அறையின் கதவு திறக்கப்படாததால், உடனடியாக ஏற்காடு காவல் நிலையத்திற்கு விடுதி ஊழியர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலறிந்து விடுதிக்கு சென்ற காவல் துறையினர், அறையை திறந்து பார்த்தபோது, அரை நிர்வாணமாக சாலா சடலமாக கிடந்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து, விடுதியில் இருந்து தகவல்களை திரட்டிய காவல் துறையினர், தலைமறைவான பார்த்திபனை தீவிரமாகத் தேடும் பணியில் இறங்கினர்.

அப்போது, அவர் அளித்த அலைபேசி எண்ணை வைத்து, அவரது இருப்பிடத்தை காவல் துறையினர் தேடியுள்ளனர். அதில், சேலம் இளம்பிள்ளை கிராமத்தில், உள்ள தனது வீட்டில் பார்த்திபன் தலைமறைவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக, வீட்டில் பதுங்கியிருந்த பார்த்திபனை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சாலாவும், பார்த்திபனும் இன்ஸ்டாகிராமில் 4 ஆண்டுகள் காதலித்து வந்தது தெரியவந்துள்ளது.

மேலும், சாலாவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும், பார்த்திபனுக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தை இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து, கொலைக்கான காரணம் குறித்து, காவல் துறையினரிடம் பார்த்திபன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதில், “திருமணத்தை மீறிய உறவில் இருந்த காதலிக்கு கடந்த 4 ஆண்டுகளாக 5 லட்சம் ரூபாய் வரை கடன் கொடுத்துள்ளேன். தற்போது, நிதி நெருக்கடியால் எனக்கு பணம் தேவைப்பட்டது. அதனால், சாலாவிடம் பணம் கேட்டேன். ஆனால், சாலா பணம் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார்.

எனவே, சமாதான பேச்சுவார்த்தை நடத்த அவரை விடுதிக்கு அழைத்தேன். அப்போது, எங்கள் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு முற்றியது. கோபத்தில் அவரது கழுத்தை நெரித்ததில், அவர் இறந்து விட்டார். உடனே, விடுதியில் இருந்து தப்பித்து ஓடிவிட்டேன்,” என்று பார்த்திபன் கூறியுள்ளார்.

கொலை செய்யப்பட்ட சாலாவின் உடலை, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும், பார்த்திபன் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், அவரை சிறையில் அடைத்தனர்.