விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இணையும் புதிய படத்துடைய அறிவிப்பு வெளியானது. இதனை வீடியோ காட்சியாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. தெலுங்கு திரைத்துறையில் வளர்ந்து வரும் நாயகனாக விஜய் தேவரகொண்டா இருந்து வருகிறார். இவரது நடிப்பில் வெளிவந்த படங்களில் அர்ஜுன் ரெட்டி திரைப்படம் அதிகம் பேசப்பட்டது. அதன் பின்னர் இவர் சில படங்களில் நடித்தாலும் மிகப்பெரிய வரவேற்பை படங்கள் பெறவில்லை.
அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட லைகர் போன்ற படங்களும் தோல்வியைத் தள்ளின. கடந்த ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த கிங்டம் என்ற திரைப்படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு பெற்றது. இருப்பினும் எதிர்பார்த்த வசூலை இந்த படம் பெறவில்லை.
அதேபோன்று கல்கி படத்தில் கேமியோ கேரக்டரில் நடித்த விஜய் தேவரகொண்டா ரசிகர்களின் பாராட்டை பெற்றிருந்தார். இந்நிலையில் அடுத்ததாக தனது 14-வது படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் ரஷ்மிகா மந்தனா இணைகிறார். இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவின் 14-வது படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில் படத்துடைய அறிவிப்பு வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி சுதந்திரம் அடைவதற்கு முன்பாக பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகள் குறித்தும், அந்த சூழலில் கதாநாயகனாக உருவெடுத்த ரணபலி என்கிற வீரன் குறித்தும் இந்த படம் பேசும் என வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.