சினிமாவை மட்டுமல்ல, அரசியல் போக்கையும் மாற்றியவர் எம்ஜிஆர் - நடிகர் கார்த்தி
எம்ஜிஆர் போன்று இனி ஒரு மனிதர் வரப் போவதில்லை என்றும் அவர் சினிமாவின் போக்கை மட்டுமல்ல அரசியலையும் மாற்றி இருக்கிறார் என்று நடிகர் கார்த்தி பேசினார்.
நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள 'வா வாத்தியார்' படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தில் பணியாற்றிய கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ஆனந்தராஜ், நலன் குமாரசாமி மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.
ஆனந்தராஜ் நெகிழ்ச்சி
அப்போது பேசிய நடிகர் ஆனந்தராஜ், ''கார்த்தியும், சூர்யாவும் என்னுடைய அண்ணன் பசங்க மாதிரி. அந்த வகையில் கார்த்தியுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சினிமா துறையை பொறுத்தவரை பல நடிகர்கள் காணாமல் போய் விடுவார்கள். ஆனால் மறைந்தாலும் யாரும் மறக்க முடியாத ஒருவர் எம்ஜிஆர் மட்டுமே, அந்த கதாபாத்திரத்தில் கார்த்தி சிறப்பாக நடித்திருக்கிறார். நம்பியாருக்கு எப்படி எந்த விதமான கெட்டப் பழக்கமும் இல்லையோ? அதே போல எனக்கும், அண்ணன் சிவக்குமாருக்கும் எந்த கெட்டப் பழக்கமும் இல்லை. படத்தின் கதாபாத்திரம் குறித்து பெரிதும் இப்போது விளக்க வேண்டாம் என இயக்குநர் கேட்டுக் கொண்டதால் அதைப்பற்றி நான் சொல்ல விரும்பவில்லை'' என்றார்.
நடிகர் சத்யராஜ்
சந்தோஷ் நாரயாணன்
இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயாணன், ''முதல் முறையாக ஒரு படத்திற்கு இசை அமைக்க பல பேரிடம் நான் கேட்டேன் என்றால் அது இந்த திரைப்படம் தான். என்னுடைய பார்வையில் 'வா வாத்தியார்' சூப்பர் ஹீரோ படம். கமர்ஷியல் படங்களுக்கு புதிய கதவை திறக்கும் படமாக இருக்கும் என்று இந்த கதையை கேட்கும் போது எனக்கு பிரமிப்பாக இருந்தது. நலன் குமாரசாமி, ரஞ்சித் போன்ற பல பேருக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வாய்ப்புகளை வழங்கி இருக்கிறார். 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்' பாடலை மையமாக வைத்து புதிய பாடலை உருவாக்கியுள்ளோம். அதில் என்னுடைய அம்மாவை பாட வைத்துள்ளேன்'' என தெரிவித்தார்.
நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்தி பேசுகையில், ''ஒவ்வொரு இயக்குநருக்கும், ஒவ்வொரு இயக்குநரை பிடிக்கும் ஆனால், நிறைய இயக்குநருக்கு பிடித்த ஒரே இயக்குநர் நலன் குமாரசாமி. அவரோடு பணியாற்றியது சுவாரசியமாக இருந்தது. இந்த கதை என்னால் பண்ண முடியுமா? முடியாதா? என்று இரவெல்லாம் யோசித்து எனக்கு தூக்கமே வரவில்லை. ஏனெனில் இந்த மாதிரி கதையானது ரசிகர்கள் ஒத்துக் கொண்டால் மிகப்பெரிய வெற்றி படம். ஒத்துக்கொள்ளவில்லை என்றால் அதுவே மிகப்பெரிய சருக்கலை சந்திக்கவும் வாய்ப்பிருக்கிறது. நாம் எவ்வளவு முறை ஜெயித்தாலும், தோற்றதை பற்றி மட்டுமே பேசும் உலகம் இது. ஆக இந்த கதாபாத்திரத்தில் மிகவும் சிரத்தை எடுத்து நடித்திருக்கிறேன். எம்ஜிஆர் தான் நடித்த படங்களில் நல்லதை மட்டுமே செய்ய வேண்டும் என சொல்லியிருக்கிறார். அதை போல, ஒரு ரசிகருக்கும், நடிகருக்கும் இடையே உள்ள அன்பு தான் இந்த படம். இந்த படத்தில் வாத்தியார் மேக்கப் போடும்பொழுது ஒவ்வொரு முறையும் ஒரு பயம் இருக்கும். அந்த பயம் தான் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ய உந்துதலாக அமைந்தது.
எம்ஜிஆரை பற்றி பேசினாலே உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. அவர் ஒரு நடிகர் மட்டும் இல்லை, அவர் ஒரு எமோஷ்னல். இனி அவரைப் போல் ஒரு மனிதர் இல்லை. அவர் சினிமாவின் போக்கையே மாற்றி இருக்கிறார். கூடுதலாக ஒரு படி மேலே சென்று அரசியலையும் மாற்றி இருக்கிறார். ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னம்பிக்கை வேண்டுமானால் அவரின் பாடல்கள் தான் இன்றும் இருக்கிறது. இன்னும் அவரின் புகைப்படங்கள் பெரும்பாலானோரின் வீடுகளிலும் கடவுளுக்கு இணையாக உள்ளது. இந்த படம் புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்கு கொடுக்கும் சமர்ப்பணம்'' என்றார்.