போர்க்களமாக மாறிய வங்கதேசம்: இளைஞர் தலைவர் படுகொலையை கண்டித்து மிகப்பெரிய வன்முறை

போர்க்களமாக மாறிய வங்கதேசம்: இளைஞர் தலைவர் படுகொலையை கண்டித்து மிகப்பெரிய வன்முறை

வங்கதேசத்தில் இளைஞர்களின் நாயகனாக பார்க்கப்பட்ட ஷரீப் உஸ்மான் ஹாடி (32) படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து அங்கு மிகப்பெரிய வன்முறை வெடித்துள்ளது.

குறிப்பாக, ஹாடி படுகொலையின் பின்னணியில் இந்தியா இருப்பதாக வதந்தி பரவுவதால் இந்திய எதிர்ப்பு மனநிலையில் போராட்டக்காரர்கள் உள்ளனர்.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதன் விளைவாக, அங்கு ஷேக் ஹசினா ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, உயிர் பிழைப்பதற்காக அவர் வங்கதேசத்தில் இருந்து வெளியேறினார். அவர் இந்தியாவில் தஞ்சமடைந்ததாக கூறப்படுகிறது.

வங்கதேசத்தில் வெடித்த இந்த மக்கள் புரட்சிக்கு 'இன்குலாப் மான்சா 'எனும் மாணவர் அமைப்பின் தலைவரான ஷரீப் உஸ்மான் ஹாடி தான் தலைமை வகித்தார். இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்து வங்கதேசத்தை மீட்க வேண்டும் என்பதே ஷரீப் உஸ்மான் ஹாடியின் பிரதான முழக்கமாக இருந்தது. எனவே, இந்தியாவுக்கு எதிரானவர் என்கிற பிம்பம் ஹாடி மீது விழுந்தது.

வரும் பிப்ரவரி மாதம் வங்கதேசத்தில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஷரீப் உஸ்மான் ஹாடியும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இதற்காக, தலைநகர் டாக்காவில் கடந்த 12 ஆம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அவரை, மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிங்கப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஹாடி உயிரிழந்த செய்தியை நேற்றிரவு வங்கதேசத்தின் இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் தொலைக்காட்சியில் அறிவித்தார்.

இந்த தகவல் வெளியாகிய அடுத்த ஒரு மணி நேரத்தில் தலைநகர் டாக்காவில் பயங்கர கலவரம் வெடித்தது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வீதிகளில் இறங்கி, வாகனங்களுக்கு தீ வைத்தனர். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

மேலும், முன்னணி நாளிதழ்களான புரதோம் ஆலா மற்றும் தி டெய்லி ஸ்டார் அலுவலகங்களும் சூறையாடப்பட்டன. இந்த கலவரம் தற்போது ராஜசாகி, சிட்டகாங் உள்ளிட்ட நகரங்களிலும் பரவ தொடங்கியுள்ளது. இந்த கலவரத்தால் தலைநகர் டாக்கா முழுவதும் போர்க்களம் போல காட்சியளிக்கிறது.

இந்நிலையில், ஷரீப் உஸ்மான் ஹாடி படுகொலைக்கு பின்னணியில் இந்தியா இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்தியாவின் உளவாளிகள் இந்த படுகொலையை செய்துள்ளதாக அவர்கள் மத்தியில் கருத்து எழுந்துள்ளது. இதனால் இந்த கலவரம் இந்தியாவுக்கு எதிரான ஒன்றாக மாறியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, டாக்காவில் உள்ள இந்திய துணைத் தூதரக அலுவலகம் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், அங்குள்ள இந்து மக்களை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ராணுவம், துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளன். எனினும், போராட்டக்காரர்கள் மிக உக்கிரமான மனநிலையில் இருப்பதால் அவர்களை ராணுவத்தினரால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனிடையே, ஹாடியின் மரணத்துக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில், நாளை (டிச.20) நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், ராணுவ தலைமையகங்களில் உள்ள தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என வங்கதேசத்தின் இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.