திமுகவில் இணைந்தார் விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார்
தவெக தலைவர் விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமார் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
அண்மையில், விஜய்யின் தவெகவில் அதிமுகவில் முக்கிய முகமாக இருந்த செங்கோட்டையன் இணைந்தார். அவரைத் தொடர்ந்து திமுக, மதிமுக, அதிமுக என பல கட்சிகளில் வலம் வந்த நாஞ்சில் சம்பத் இணைந்தார். இதனால் தவெகவுக்கு பலம் கூடியதாக பேசப்பட்ட நிலையில் விஜய்யின் முன்னாள் மேலாளர் திமுகவில் இணைந்துள்ளார்.
யார் இந்த பி.டி.செல்வகுமார்? திமுகவில் இணைந்துள்ள பி.டி.செல்வகுமார், விஜய் நடித்த ‘புலி’ படத்தின் தயாரிப்பாளர் எனத் தெரிகிறது. தவிர இவர், ’கோயமுத்தூர் மாப்பிள்ளை’ படத்தில் விஜய்யுடன் நடித்தும் உள்ளார். மேலும், விஜய்யின் ‘சுறா’, ‘வில்லு’ ‘போக்கிரி’ ஆகிய படங்களுக்கு பிஆர்ஓவாக பணியாற்றி இருக்கிறார்.