இலங்கையில் டிட்வா சூறாவளி தாக்கத்தினால் வரலாறு காணாத பெரும் பாதிப்புகளை அந்நாடு எதிர்கொண்டுள்ள நிலையில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை முழுவதும் வடக்கு நோக்கி டிட்வா புயல் சுழறண்டித்ததில், கொழும்பு, அனந்புரா, பதுளை, நுவரெலியா, கேகாலை, கண்டி, ரத்தினபுரி உள்ளிட்ட 17 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த வாரத்தில் இருந்தே இலங்கையில் பருவமழை தீவிரமடைந்த நிலையில், நேற்று முன்தினம் மத்திய மாத்தளை மாவட்டத்தில் அதிகபட்சமாக 54 சென்டி மீட்டர் மழை பெய்தது. கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளில் 30 சென்டி மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு பதிவானது.
களனி நதி இதுவரை காணாத வெள்ள அளவை நெருங்கி வருவதால், கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தியது. கொழும்புவிற்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை கொண்ட கம்பஹா மாவட்டத்திலும் கடுமையான வெள்ள அச்சுறுத்தல் நிலவுகிறது. பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மட்டும் 35 பேர் உயிரிழந்தனர். ரம்போடா கிராமத்திற்கு மேலே உள்ள மலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால், பாறைகள் இடிந்து விழுந்து கிராமத்தையே புதைத்தது. திடீர் வெள்ளத்தால் மொரகஹகந்த பிரதான பாலம், வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது.
எலஹெர பாலம், குமார எல்ல பாலம் இடைவிடாத நீரோட்டத்தால் இடிந்து விழுந்தது. இதனால் முக்கிய பகுதிகளுக்கு மீட்பு குழுவினர் செல்வது தடைப்பட்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கானவர்களை வெளியேற்றுவதில் சிக்கல் நீடிக்கிறது. கடும் வெள்ளப்பெருக்கால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அந்நாட்டில் 20 சதவீத மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும், அத்தியாவசிய தேவைகளும் சென்றடைவதில் தடங்கல் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
நாடு முழுவதும் கிட்டத்தட்ட இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பள்ளிகள் மற்றும் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கும், பேரழிவால் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கானோருக்கு நிவாரணம் வழங்குவதற்கும் மீட்புக் குழுக்கள் பணியாற்றி வருகின்றன. வெள்ளத்தால் வீடுகளுக்குள் முடங்கிய பொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகளில் ராணுவமும் காவல்துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. வீட்டு மாடிகள், கூரைகள், மரங்களில் சிக்கிய ஏராளமானோரை விமானப்படை மீட்டது.
இந்நிலையில், மக்களுக்கு அவசர நிவாரணங்களை வழங்குதல் மற்றும் நாட்டை மறுசீரமைத்தல் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். பல்கலைகழக மற்றும் அரசு பணி தேர்வுகள் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 16ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ள. கடந்த 2016 ஆம் ஆண்டு பெருவெள்ளத்தில் 71 பேர் உயிரிழந்தனர். இதனை மிஞ்சி தற்போதைய வெள்ள பாதிப்புகள் மோசமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா முதல் நாடாக உதவிக்கரம் நீட்டியுள்ளது. ஆபரேஷன் சாகர் பந்து-வின் கீழ் ஐஎன்எஸ் விக்ராந்த், ஐஎன்எஸ் உதயகிரி கப்பல்கள் மூலம் அவசரகால உணவுகள் முதல் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு இலங்கை அரசு நன்றி கூறியுள்ளது.