இந்த போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் : சென்னை கமிஷனர் அதிரடி உத்தரவு
போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்க சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், 55 காவல் நிலையங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
10 வகையான விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என போக்குவரத்து காவலர்களுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்த பெருநகர சென்னைப் போக்குவரத்து காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு காவலர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் 55 போக்குவரத்து காவல் நிலைய காவலர்களுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதன்படி குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பயணிப்பது, அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகத்தில் சாலைகளில் செல்லுதல் போன்றவற்றுக்கு அபராதம் விதிக்கப்படும்.
மேலும் எதிர்த் திசையில் வாகனம் ஓட்டுதல், ஆட்டோ ஓட்டுனர் சீருடை அணியாதது, போக்குவரத்துக்கு இடையூறாக வாகனம் நிறுத்துதல், விதிமுறை பின்பற்றி நம்பர் பிளேட் பொருத்தாதது உள்ளிட்ட செயல்களில் ஈடுபவர்களையும் கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும் என்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.