காஸா பகுதிக்குத் திரும்பும் பாலஸ்தீன மக்கள் - போர் நிறுத்தத்திற்கு பின் பிறப்பிடம் நோக்கி பயணம்!

காஸா பகுதிக்குத் திரும்பும் பாலஸ்தீன மக்கள் - போர் நிறுத்தத்திற்கு பின் பிறப்பிடம் நோக்கி பயணம்!

போர் நிறுத்த ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டு, இஸ்ரேலிய ராணுவம் திரும்பப் பெறப்பட்டுள்ளதால், பாலஸ்தீன மக்கள் காஸாவுக்கு திரும்பி வருகின்றனர்.

இரண்டு ஆண்டுகளாக நடைபெறும் இஸ்ரேல்-ஹமாஸ் போரின் தீவிரம் இப்போது தான் தணிந்துள்ளது. செப்டம்பர் 29, 2025 அன்று, அமெரிக்கா முன்வைத்த அமைதி ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல், ஹமாஸ் ஆகிய இருதரப்பும் ஆதரவு தெரிவித்தது. இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தை ஏற்பதாக இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், முதற்கட்ட அமைதி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகளை இருதரப்பும் நிறைவேற்றி வருகிறது.

ஒப்பந்தத்தில் கூறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், இஸ்ரேல்-ஹமாஸ் ஆகிய இருதரப்பும் தங்கள் வசமுள்ள பணயக்கைதிகளை ஒப்படைக்க வேண்டும், தாக்குதலை தொடரக்கூடாது, பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் உள்ள இஸ்ரேல் ராணுவப்படை வெளியேற வேண்டும் என்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இதனையடுத்து, ஆயிரக்கணக்கிலான மக்கள் காஸா பகுதிக்கு ஊர்வலம் போல செல்லும் காட்சி தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன. இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான தாக்குதலில், பாலஸ்தீனத்தின் காஸா பகுதி உருக்குலைந்து காணப்படுகிறது. பல அடுக்குமாடிக் கட்டடங்கள் குண்டுகளுக்கு இரையாகியுள்ளன. இந்த சூழலில், மக்கள் தங்கள் இருப்பிடங்கள் இருக்குமா? என்ற ஏக்கத்துடன் காஸா பகுதிக்கு நகர்ந்து வருகின்றனர்.

இதற்கிடையில், ஹமாஸ் அடுத்த வார தொடக்கத்தில் தாங்கள் பிடித்து வைத்திருக்கும் 20 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு இஸ்ரேலிய சிறைகளில் நீண்டகாலமாக தண்டனை அனுபவித்துவரும் 250 பாலஸ்தீனியர்களையும், போரின் போது பிடித்து வைக்கப்பட்டிருக்கும் 1,700 பேரையும் இஸ்ரேல் விடுவிக்கும் என்று உறுதி அளித்துள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த தருணத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சில கருத்துகளை பதிவு செய்துள்ளார். அதில் அவர், “எங்கள் ராணுவ பலத்தால் கடுமையான அழுத்ததைக் கொடுத்து பணயக்கைதிகளை மீட்டிருப்போம். ஆனால், பிரச்சினைகள் இன்றி அனைத்தும் சுமூகமாக நடந்துள்ளன. இதற்கு ஆதரவளித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

மேலும், “அமைதி ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் ஆதரவு அளித்துள்ளது. எனினும், கத்தி இன்னும் அவர்கள் கழுத்தில் தான் இருக்கிறது. ஹமாஸ் தங்கள் ஆயுதங்களை சமர்பிக்க வேண்டும். அப்போது தான் காஸாவில் இருந்து முழுமையாக இஸ்ரேலிய படைகள் வெளியேறும். பிரச்சினைகளை சுமுகமாக அணுகினால் அவர்களுக்கு நல்லது. இல்லையென்றால் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்,” என்று பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

நேற்று மாலை ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் பாலஸ்தீன விடுதலைக்கான மக்கள் முன்னணி ஆகியவை இணைந்து வெளியிட்ட ஒரு கூட்டு அறிக்கையில், “காஸாவில் எந்தவொரு வெளிநாட்டு தலையீடும் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. அதன் நிர்வாகம் முற்றிலும் பாலஸ்தீனத்தின் உள்நாட்டு விவகாரம்; அதை பாலஸ்தீன அரசு பார்த்துக்கொள்ளும்,” என்று தெரிவித்துள்ளது.

நிவாரண உதவிகள்

இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை முதல் காஸாவிற்கு படிப்படியாக உதவிகளை வழங்க இஸ்ரேல் ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுமதி அளித்துள்ளதாக ஐ.நா அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பஞ்சத்தை போக்க இந்த உதவிப் பொருட்கள் அனுப்பப்படுகின்றன என்று அவர் கூறியுள்ளார்.

எல்லைகள் திறக்கப்பட்டுள்ளதால் ஜோர்டான், எகிப்து போன்ற அண்டை நாடுகளில் ஏற்கனவே தக்கவைக்கப்பட்டுள்ள ஒரு லட்சத்து 70 ஆயிரம் மெட்ரிக் டன் நிவாரணப் பொருள்கள் காஸா பகுதிக்கு அனுப்பப்பட உள்ளன.

கடந்த பல மாதங்களாக, ஐ.நா-வும், அதன் கூட்டாளிகளும் இணைந்து காஸா பகுதியில் 20 விழுக்காடு மட்டுமே உதவிகளை வழங்க முடிந்தது என்று ஐ.நா. மனிதாபிமானத் தலைவர் டாம் பிளெட்சர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.