திருச்சி வேலுசாமி ஆதரவாளர்கள் உதயநிதி ஆதரவாளர்களும் மோதல்

ஆட்சியில் பங்கு, கரூர் சம்பவம் விவகாரம் தொ-டர்பாக, காங்கிரஸ் மூத்த நிர்வாகி திருச்சி வேலுசாமியின் ஆதரவாளர்களும், துணை முதல்வர் உதயநிதியின் ஆதரவாளர்களும், சமூக வலைதளைங்களில் மோதிக் கொண்டது, தி.மு.க.,- காங்கிரஸ் கூட்டணியில், சலசலப்பை உருவாக்கி உள்ளது.
சமீபத்தில், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியான, திருச்சி வேலுசாமி அளித்த பேட்டியில், 'வரும் 2026ல் காங்கிரஸ் கட்சிக்கு, ஆட்சியில் பங்கு தருவோர் மட்டும்தான், தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியும். கரூர் சம்பவத்தில் ஆட்சியாளர்களின் வக்கிர புத்தியால், கையாளாகாத அதிகாரிகளால், 41 உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.
துபாய்க்கு சென்ற உதயநிதி, திரும்ப கரூர் வந்து உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு மீண்டும் துபாய் சென்றதற்கு என்ன காரணம்' எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதனால் அதிருப்தி அடைந்த, உதயநிதி ஆதரவாளர்கள், அவர் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'வேலுசாமி மன்னிப்பு கேட்க வேண்டும். சுப்பிரமணியசாமியோடு சேர்ந்து ராஜிவ் கொலையில் கூட்டு சதி செய்த துரோகியே, சத்தியமூர்த்தி பவனில் யாரும் உன்னை மதிக்கமாட்டார்கள். அயராது உழைக்கும் உதயநிதியை விமர்சனம் செய்யும் அளவுக்கு, உனக்கு என்ன யோக்கியதை இருக்கு. இண்டியா கூட்டணியை சிதைக்கும் இவர் மீது ராகுல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாவை அடக்கி பேசு, இல்லையேல் அடக்கப்படுவாய்' என்ற வாசகத்துடன், நாமக்கல் மேற்கு மாவட்டம், பள்ளிப்பாளையம் வடக்கு ஒன்றிய தி.மு.க., இளைஞரணி சார்பில், கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டது.
தி.மு.க.,வினர், காங்கிரசின் நம்பிக்கையை சிதைக்க முடியாது. வரும் 2026ல் தி.மு.க.,வின் கனவை தகர்க்கப்போகும் சக்தி காங்கிரஸ் தான். 'கை நம்மை விட்டு போகாது' என, உதயநிதி சொல்கிறார். தி.மு.க., எப்போதும் காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் தனித்து சாதிக்க முடியாது என வரலாறு கூறுகிறது. அந்த உண்மையை உதயநிதி நன்றாக அறிந்திருக்கிறார். ராகுலும், ஸ்டாலினும் நண்பர்கள் தான். ஆனால், காங்கிரஸ் அடிமை அல்ல. தி.மு.க.,வுக்கு காங்கிரஸ் ஆதரவு தேவையெனில், அதிகாரப்பங்கீடுநியாயமாக வழங்க வேண்டும்.
காங்கிரஸ் தொண்டர்கள் ஒன்றிணைவோம். காங்கிரசின் குரலை தி.மு.க.,வின் இரட்டை நடிப்பு மூட முடியாது. வரும் 2026ம் ஆண்டு காங்கிரசின் எழுச்சி ஆண்டு என, பதில் கொடுத்துள்ளனர்.
இப்படி இரு தரப்பினர் மத்தியில் ஏற்பட்டுள்ள மோதல், தி.மு.க.,- காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பை உருவாக்கி உள்ளது.