பழைய ஓய்வூதிய திட்டம் வருகிறது? ஸ்டாலின் கையில் ரிப்போர்ட் தந்த IAS ககன்தீப்.. விரைவில் நல்ல முடிவு?
பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆராய்ந்திட அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme) மீண்டும் கொண்டுவர வலியுறுத்தி வருகின்றனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் தொடர்ந்து போராட்டங்கள் மூலமும், கோரிக்கை மனுக்கள் வாயிலாகவும் தங்கள் நிலைப்பாட்டை அரசுக்கு எடுத்துரைத்துள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டம்
அரசியல் கட்சிகளும் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், வரும் பிப்ரவரி மாதத்திற்குள் இதில் ஒரு முக்கிய முடிவு எட்டப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாகவும், பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஓய்வுபெறும் ஊழியரின் கடைசி மாத சம்பளத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படும். மேலும், அகவிலைப்படியும் (DA) அவ்வப்போது திருத்தப்படும். இது ஓய்வுக்குப் பின் ஊழியர்களுக்கு சிறந்த நிதி பாதுகாப்பையும் நிலைத்தன்மையையும் வழங்குகிறது.
தமிழக அரசின் திட்டம் - பழைய ஓய்வூதிய திட்டம்
ஜனவரி 1, 2004 முதல், புதிய அரசு ஊழியர்களுக்கு OPS திட்டம் நிறுத்தப்பட்டு, தேசிய ஓய்வூதிய முறை (NPS) அறிமுகப்படுத்தப்பட்டது. NPS என்பது சந்தை அடிப்படையிலான பங்களிப்புத் திட்டமாகும், இதில் ஓய்வூதியம் முதலீடுகளின் சந்தை செயல்பாட்டைப் பொறுத்தது. சமீபத்தில் சில மாநிலங்கள் OPS திட்டத்தை தங்கள் ஊழியர்களுக்கு மீண்டும் அமல்படுத்தியுள்ளன. எனினும், பெரும்பாலான மாநிலங்களில், 2004-க்கு முன் பணியில் சேர்ந்தவர்கள் மட்டுமே இதற்குத் தகுதியானவர்கள்.
அக்டோபர் 1 முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் 15 நாட்கள் வரை ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றும் வசதி ஏற்படுத்தப்படும் என்ற சமீபத்திய அறிவிப்பு சற்று ஆறுதல் அளித்துள்ளது. இருப்பினும், இது பழைய ஓய்வூதியத் திட்டக் கோரிக்கையுடன் ஒப்பிடுகையில் ஒரு சிறிய சலுகையாகவே பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்குவதால், ஸ்டாலின் அரசு விரைவில் ஊழியர்களுக்கு நல்ல செய்தி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம்
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரமாக்குவது போன்ற பிற வாக்குறுதிகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழக அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சில வாரங்களில் இது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகலாம். இதற்கான ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் பரிந்துரைகள் அடுத்த சில வாரங்களில் வெளியாகும் எனத் தெரிகிறது.
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பல்வேறு சலுகைகள் மற்றும் பிற கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வருகிறது. பழைய ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்ற நம்பிக்கையில் அரசு ஊழியர்கள் உள்ளனர்.
சட்டமன்றத் தேர்தல்- Old Pension Scheme
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பே இந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. OPS திட்டம் நடைமுறைக்கு வந்தால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படும் என்பதால், இழப்புகளைக் குறைக்கும் வகையில் சில மாற்றங்களுடன் இத்திட்டத்தை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக அரசுக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு பாரம்பரியமாக அதிகம். ஆனால், தற்போதைய ஆட்சியில் முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் ஒருவித அதிருப்தி நிலவுகிறது. இதனால் மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் திமுகவுக்கு எதிராக வாக்களித்ததாகக் கூறப்படுகிறது. தபால் வாக்குகள் அதிமுக, பாஜகவுக்குச் சென்றது இதற்குச் சான்றாகக் கூறப்படுகிறது. எனவே, அரசு ஊழியர்களின் மனதை திருப்திப்படுத்தும் வகையில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன் பழைய ஓய்வூதியத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.