டி20 தொடரை வெல்லுமா இந்தியா? தென்னாப்பிரிக்காவுடன் இன்று மோதல்
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் ஐந்தாவது போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென்னாப்பிரிக்க அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரண்டில் இந்திய அணியும், ஒரு போட்டியில் தென்னாப்பிரிக்க அணியும் வெற்றியைப் பதிவு செய்துள்ளனர். மேலும் ஒரு போட்டியானது கடும் பனி காரணமாக கைவிடப்பட்டது.
இந்த நிலையில், இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கும் இடையிலான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 5ஆவது மற்றும் கடைசி போட்டி இன்று (டிசம்பர் 19) அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை வெல்லும். தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை சமன் செய்யும். இதன் காரணமாக இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அணியின் பேட்டிங்கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா அகியோர் வலுசேர்க்கும் நிலையில், ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ஷிவம் தூபே ஆகியோர் தொடர்ந்து சொதப்பி வருவது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஷுப்மன் கில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மற்றொரு நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என்ற தகவகலும் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதுடன், இந்திய அணியின் பேட்டிங்கையும் பலப்படுத்தும் செய்தியாக அமைந்துள்ளது. அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இருப்பது பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரு அணிகளும் இதுவரை 35 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 20 போட்டிகளில் வெற்றி பெற்று ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது. அதேசமயம் தென்னாப்பிரிக்க அணி 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இரண்டு போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை.
மேலும் இந்தியாவில் இவ்விரு அணிகளும் 16 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், அதில் தென்னாப்பிரிக்க அணி 7 முறையும், இந்தியா 7 முறையும் வெற்றியைப் பதிவு செய்துள்ளனர். மேலும் இரண்டு போட்டிகளின் முடிவு எட்டப்படவில்லை. இதனால் இன்றைய ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.