எந்த மழை வந்தாலும் சமாளிப்பதற்கு அரசு தயார்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

எந்த மழை வந்தாலும் சமாளிப்பதற்கு அரசு தயார்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
By: No Source Posted On: October 17, 2024 View: 6742

எந்த மழை வந்தாலும் சமாளிப்பதற்கு அரசு தயார்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையின் காரணமாக அரசு நிர்வாகத்தை முடுக்கிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை நிவாரண பணிகளை வேகப்படுத்தினார்.

 

அதுமட்டுமின்றி சென்னை நகரின் பல பகுதிகளுக்கும் சென்று அவர் ஆய்வு நடத்தினார். நேற்று முன்தினம் யானைக்கவுனி, புளியந்தோப்பு உள்ளிட்ட வடசென்னை பகுதிகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கிண்டி ரேஸ் கிளப் பகுதி. வேளச்சேரி ஆறுகண் கல்வெட்டு வீராங்கால் ஓடை மற்றும் நாராயணபுரம் ஏரி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டார்.

 

இதைத் தொடர்ந்து இன்று மீண்டும் சென்னை கொளத்தூர் தொகுதிக்கு சென்று அங்கு நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

 

கொளத்தூர் வீனஸ் நகர் 200 அடி சாலை பகுதிகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரெட்டேரியில் நிரம்பிய தண்ணீரை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

அங்கு அவருக்கு அதிகாரிகள் தண்ணீர் வரத்து மற்றும் கரைகளை பலப்படுத்தியது பற்றியும் விளக்கி கூறினார்கள்.

 

இதன் பிறகு பாலாஜி நகருக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்காலிக மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். பின்னர் தணிகாசலம் நகர் கால்வாயை பார்வையிட்டார். அதன் பிறகு கார்த்திகேயன் சாலையில் உள்ள திருவள்ளுவர் திருமண மண்டபத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

 

பின்னர் ஜம்புலிங்க மெயின்ரோட்டில் உள்ள திருமண மண்டபத்திற்கு சென்று தூய்மை பணியாளர்கள் மற்றும் முன் கள' பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

 

அங்கிருந்து ஜி.கே.எம்.காலனி ஜம்புலிங்கம் ரோட்டில் உள்ள கனரா வங்கி அருகில் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.

 

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எந்த மழை வந்தாலும் சமாளிப்பதற்கு இந்த அரசு தயாராக இருக்கிறது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக மக்களின் பாராட்டுகள் வருகின்றன.

 

பாராட்டுகள் அரசுக்கு வருவதை தாங்கிக்கொள்ள முடியாத ஒருசிலரின் விமர்சனமும் சமூக வலைதளங்களில் வருகிறது. அதையெல்லாம் நாங்கள் பொருட்படுத்தவில்லை என்று கூறினார்.

 

அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர் பாபு மற்றும் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ. மேயர் பிரியா, ஆணையாளர் குமரகுருபரன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர்.

Tags:
#முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  # chennai rain  # tamilnadu  # 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos