சரஸ்வதி பூஜை, விஜயதசமி.. இந்த நாளில் என்ன செய்ய வேண்டும்?

சரஸ்வதி பூஜை, விஜயதசமி.. இந்த நாளில் என்ன செய்ய வேண்டும்?
By: No Source Posted On: October 08, 2024 View: 1109

சரஸ்வதி பூஜை, விஜயதசமி.. இந்த நாளில் என்ன செய்ய வேண்டும்?

நவராத்திரி விழாவின் நிறைவாக வருவதே சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமி திருநாளாகும். நவராத்திரி விழாவின் நிறைவு நாளான பத்தாவது நாள் தமிழகத்தில் விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது. கர்நாடகா போன்ற பிற மாநிலங்களிலும், வட மாநிலங்களிலும் இது தசரா என்ற பெயரில் பத்து நாட்கள் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

 

தசரா அல்லது விஜயதசமி என்பது வெற்றியை கொண்டாடும் நாளாகும். இது தீமை அழிந்து, நன்மை உலகில் நிலைநாட்டப்படுவதை கொண்டாடும் திருநாளாகும். இந்த ஆண்டு சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி விழா எப்போது வருகிறது, இந்த நாட்களின் சிறப்பு என்ன, இவற்றை எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

 

நவராத்திரி வழிபாட்டு பலனை பெற:

நவராத்திரி விழாவின் உச்ச நிகழ்வாக கொண்டாடப்படுவது சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழா. இந்த நாட்களை பலரும் விடுமுறைக்கான நாட்களாக மட்டுமே கருதுகின்றனர். ஆனால் நவராத்திரி வழிபாட்டின் முழு பலனையும் தரக் கூடிய நாட்கள் தான் இவை. நவராத்திரியின் முதல் எட்டு நாட்கள் விரதம் இருந்து, அம்பிகையை அந்த அந்த நாளுக்குரிய முறையில் வழிபட முடியாதவர்களும் கூட கடைசி இந்த இரண்டு நாட்களில் விரதம் இருந்து வழிபட்டால் அனைத்து நலன்களையும் பெற முடியும். அப்படிப்பட்ட அற்புதமான, சக்தி வாய்ந்த நாட்களில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

 

சரஸ்வதி பூஜை 2024 தேதி :

நவராத்திரி விழா இந்த ஆண்டு அக்டோபர் 03ம் தேதி துவங்கி, அக்டோபர் 11ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் நிறைவு நாளும், ஒன்பதாவது நாளுமான அக்டோபர் 11ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. நவராத்திரியின் கடைசி மூன்று நாட்களுமே ஞானத்தை வழங்குகின்ற கலைமகளாகிய சரஸ்வதிக்குரிய வழழிபாட்டு நாட்களாக இருந்தாலும், நவராத்திரியின் ஒன்பதாவது நாளை சரஸ்வதி பூஜையாக கொண்டாடுகிறோம். இது ஆயுத பூஜையாகவும் கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை இந்த ஆண்டு அக்டோபர் 11ம் தேதி வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது.

 

ஆயுத பூஜையில் செய்ய வேண்டியவை :

மகிஷாசுரனை வதம் செய்வதற்காக கடும் தவம் இருந்து, ஒவ்வொரு தெய்வங்களிடம் இருந்து அன்னை பராசக்தி ஒவ்வொரு விதமான சக்தி வாய்ந்த ஆயுதங்களை பெற்றாள். போரின் இறுதி நாளில், போர்க்களத்திற்கு புறப்படுவதற்கு தெய்வங்களிடம் இருந்து பெறப்பட்ட ஆயுதங்களை வைத்து, அன்னை பராசக்தி பூஜை செய்து வழிபடுகிறாள். தனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக அன்னை பராசக்தி ஆயுதங்களை வைத்து வழிபட்ட இந்த நாளையே நாம் ஆயுத பூஜையாக கொண்டாடுகிறோம். இந்த நாளில் நாமும் நம்முடைய வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு, அடுத்த நிலைக்கு உயர்வதற்கு பயன்படக் கூடிய பொருட்களை வைத்து பூஜை செய்து வழிபட வேண்டும்.

 

விஜயதசமி 2024 (தசரா) :

நவராத்திரி ஒன்பது நாட்களை கொண்ட வழிநாட்டு விழாவாக இருந்தாலும் அதன் இறுதி நாளாக நாம் கருதுவது வளர்பிறை தசமி நாளை தான். அம்பிகை பத்தாவது நாளில் மகிஷனை போரில் வதம் செய்து வீழ்த்தி, வெற்றி வாகை சூடிய நாளையே விஜயதசமியாக நவராத்திரியின் பத்தாவது நாளில் கொண்டாடுகிறோம். இது அம்பிகை மகிஷாசுரமர்த்தினியாக, மகிஷனை வதம் செய்த நாளாகவும், ராமாயணத்தின் ராம பிரான், ராவணனை போரில் வதம் செய்த நாளாகவும் கருதி கொண்டாடுகிறோம். அம்பிகையின் வெற்றியை கொண்டாடும் இந்த நாள் நம்முடைய வாழ்விலும் வெற்றிகளை பெற உதவ வேண்டும் என்பதற்காக வழிபடக் கூடிய முக்கியமான நாளாகும்.

 

விஜயதசமியில் என்னவெல்லாம் செய்யலாம்?

இந்த ஆண்டு விஜயதசமி விழா அக்டோபர் 12ம் தேதி சனிக்கிழமை வருகிறது. இது புரட்டாசி கடைசி சனிக்கிழமையும் கூட. இந்த நாளில் புதிய தொழில்கள், கல்வி, கலைகள் சாந்த பணிகளை துவங்குவது வழக்கம். குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பது, குழந்தைகள் கல்வியை துவக்கும் வித்யாரம்பம் நிகழ்வும் விஜயதசமி நாளில் நடத்தப்படும். விஜயதசமி நாளில் குழந்தைகளுக்கு அரிசி, நெல் ஆகியவற்றில் முதல் எழுத்தை எழுத வைத்தால் அவர்கள் அன்னை பராசக்தியின் அருளால் மேலும் மேலும் கல்வியில் உயர்வார்கள் என்பது நம்பிக்கை. புதிய தொழில்கள், வியாபாரம் துவங்குபவர்கள், புதிய சொத்துக்கள் வாங்க நினைப்பவர்கள் இந்த நாளில் துவங்குவது வழக்கமாக உள்ளது.

Tags:
#சரஸ்வதி பூஜை  # விஜயதசமி  #  

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos