நீங்கள் ஷீரடி சாய்பாபா பக்தரா? இதை மிஸ் பண்ணிடாதீங்க
சாய்பாபாவின் பக்தர்களுக்கு மிக முக்கியமான வழிபாட்டு நாள் வியாழக்கிழமையாகும். தங்களின் வழிகாட்டியாகவும், குருவாகவும், தந்தையாகவும் பலரும் சாய்பாபாவை உளமாற ஏற்று வாழ்வதால், ஆன்மிக ஞானத்தை வழங்கும் அவருக்குரிய நாளாக வியாழக்கிழமை போற்றப்படுகிறது. சாய்பாபாவிற்குரிய மற்றொரு முக்கியமான நாளையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ஷீரடி சாய்பாபா வழிபாடு :
ஷீரடி சாய்பாபாவின் பக்தர்கள் உலகம் முழுவதும் நிறைந்திருக்கிறார்கள். முன்பெல்லாம் ஷீரடி சாய்பாபாவிற்கு ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் தான் கோவில்கள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் சமீப காலங்களில் ஷீரடி சாய்பாபாவிற்கு கோவில்கள் மட்டுமின்றி சாய் பக்தியுடன் அதிக பரவி உள்ளது. இப்போதெல்லாம் கோவில்கள் பலவற்றிலும் சாய்நாதருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டு, வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதே போல் சாய்பாபா பக்தர்களின் வாழ்க்கையிலும், ஆலயங்களிலும் நிகழ்த்தும் அதிசயங்கள் பலவும் இன்றும் பல இடங்களில் நடந்து வருகிறது.
சாய்பாபா கோவில்கள் :
வாரந்தோறும் வரும் வியாழக்கிழமைகள் மட்டுமின்றி, விஜய தசமி, குரு பூர்ணிமா போன்ற நாட்கள் சாய் பக்தர்களுக்கு மிக முக்கியமான நாட்கள் ஆகும். அக்டோபர் மாதத்தில் வரும் விஜயதசமி நாளில் தான் ஷீரடி சாய்பாபா ஸித்தி அடைந்தார். அதனால் இந்த நாளில் ஷீரடியில் மட்டுமின்றி எங்கெல்லாம் ஷீரடி சாய்பாபாவிற்கு கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளதே அங்கெல்லாம் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். சாய்நாதரின் அருளை பெறுவதற்கு பக்தர்கள் பலரும் அவரது கோவிலை நாடி சென்று கொண்டிருக்கிறார்கள். சாய் நாதரின் புகழாலும், அருளாலும், அதிசயங்களாலும் ஈர்க்கப்பட்ட பக்தர்கள் பலரும் தினந்தோறும் சாய்பாபா கோவில்களில் சென்று வழிபட்டு வருகிறார்கள்.
ஷீரடி சாய்பாபா அவதார தினம் :
அந்த வகையில் செப்டம்பர் 28ம் தேதியும் சாய் பக்தர்களுக்கு மிகவும் முக்கியமான நாளாகும். காரணம் இது தான் சாய்பாபாவின் திருஅவதார தினமாக சொல்லப்படுகிறது. சாய்பாபா எந்த ஆண்டு, எந்த நாளில், எந்த ஊரில் அவதரித்தார்? அவரது பெற்றோர் யார்? அவரது இயற்பெயர் எது என்பது இப்போது வரை யாருக்கும் தெரியவில்லை. யூகங்கள் மற்றும் வாய்மொழி செய்தியாக சாய்நாதரின் இளமை கால வாழ்க்கை பற்றி பல விஷயங்கள் சொல்லப்பட்டாலும், உறுதியான தகவல் என்று எதுவும் தெரியவில்லை. இருந்தாலும் 1838ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதியே ஷீரடி சாய்பாபாவின் அவதார தினமாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
பாபாவின் வாழ்க்கை :
சாய்நாதர் பெற்றோர் பற்றி அவரிடமே பலரும் கேட்டுள்ளனர். ஆனாலும் அவர் அதற்கான சரியான பதிலை சொல்லியது கிடையாது என சொல்லப்படுகிறது. சாய்நாதர் தன்னுடைய 16வது வயதில் தான் ஷீரடிக்கு வந்ததாக சொல்லப்படுகிறது. ஆரம்ப காலத்தில் வேப்ப மரத்திற்கு அடியில் தெய்வீக தோற்றத்துடன் ஆசனத்தில் அமர்ந்திருந்த அந்த சிறுவன், இரவு-பகல், மழை-வெயில் என எதற்கு சலனப்படாமல் இருந்துள்ளதையே பலரும் கண்டுள்ளனர். யாருடைய வீட்டிற்கு சென்று உணவு போன்ற எதை யாசகம் கேட்டு பெறாத அந்த சிறுவன் காலப் போக்கில் பலருக்கும் வாழ்க்கை, ஆன்மிக பற்றி போதனைகளை வழங்கியதுடன், பலரத வாழழ்க்கையிலும் அற்புதங்கள் நிகழ்த்த துவங்கி உள்ளான்.
பாபாவின் அற்புதங்கள் :
தன்னை தேடி வந்த பலரது பிரச்சனைகளை தீர்த்து வைத்து, அருளை வழங்க துவங்கியதால் பலரும் இவரது சீடர்கள் ஆகி அவரை பின்பற்ற துவங்கினர். அவரது தாங்கள் சொல்லாமலேயே, சாய்நாதரை நினைத்து மனதார வழிபட்ட மாத்திரத்திலேயே அவர்களது பிரச்சனைகள் நீங்கி, நன்மைகள் நடக்க துவங்கியது. இதனால் பலரும் சாயின் தீவிர பக்தர்களாக மாறினர். ஷீரடியில் ஸித்தி அடைந்த பிறகும் சமாதியில் இருந்த படி பக்தர்கள் பலருக்கும் காட்சி கொடுத்து, அவர்களை வழிநடத்தி வருகிறார் பாபா. இதனால் உலகின் பல பகுதிகளிலும் பாபாவிற்கு கோவில் எழுப்பப்பட்டாலும் ஷீரடிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தினம் வந்து வழிபட்டு செல்கிறார்கள்.
சாய் அவதார தினத்தில் செய்ய வேண்டியவை :
ஷீரடி சாய்பாபாவின் திருஅவதார தினத்தில் அவரை கோவிலுக்கு சென்று தரிசிப்பதும், அவரை நினைத்து வழிபடுவதும் மிகவும் சிறப்பானதாகும். குறிப்பாக சாய்பாபாவின் பெயரால் பிறருக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை செய்வதாலும் சாய்பாபாவின் அருளை பெற முடியும். இருந்த இடத்தில் இருந்தே சாய்பாபாவை மனதார வழிபடுவதால் அவரது அருளும், திருக்காட்சியும் கிடைக்கும். வீட்டில் சாய்பாபாவின் சிலை அல்லது படம் வைத்திருந்தால் அதற்கு பூ போட்டு, விளக்கேற்றி, கற்கண்டு நைவேத்தியம் படைத்து, சாய் நாமங்களை சொல்லி வழிபடலாம். ஏதாவது ஒரு உயிரினத்திற்கு அதன் பசி தீர உணவிடுங்கள் சாய்நாதரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.