புரட்டாசி முதல் சனிக்கிழமை - ஏழுமலையானை தரிசிக்க குவிந்த பக்தர்கள்
புரட்டாசி மாதம் ஏழுமலையானுக்கு உகந்த மாதம் என்பதால் நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து வருகின்றனர்.
குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் நடைபாதையாகவும், பஸ், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் அதிக அளவில் குவிந்தனர்.
இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் அறைகள் அனைத்தும் பக்தர்கள் நிரம்பி வழிந்தது. தரிசன வரிசையில் இருந்து நீண்ட தூரத்திற்கு பக்தர்கள் தரிசனத்திற்காக காத்து இருந்தனர். நேற்று நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
இன்று காலை முதல் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தேவஸ்தான அதிகாரிகள் திணறினர்.
அவர்களுக்கு தேவையான உணவு குடிநீர் பால் உள்ளிட்டவைகளை தேவஸ்தான தன்னார்வலர்கள் வழங்கி வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 73,104 பேர் தரிசனம் செய்தனர். 28, 330 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.25 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.