டெஸ்ட் போட்டி : முதல் இன்னிங்சில் இந்தியா 376 ரன்கள் குவிப்பு
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது.
நேற்று காலை மேகமூட்டமாக காணப்பட்டதால் முதல் செசனில் பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் இருந்தது. இதனால் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் ஹசன் முகமது இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி ஆகியோரை விரைவாக சாய்த்தார். இதனால் இந்தியா 34 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
4-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. அணியின் ஸ்கோர் 96 ரன்னாக இருக்கும்போது ரிஷப் பண்ட் 39 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அரைசதம் அடித்த ஜெய்ஸ்வால் 56 ரன்னில் வெளியேறினார். கே.எல்.ராகுல் 16 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.
7-வது விக்கெட்டுக்கு ஜடேஜா உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அஸ்வின் சதம் அடிக்க ஜடேஜா சதத்தை நெருங்கினார். இந்த ஜோடியை வங்கதேச பந்து வீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. இதனால் நேற்றைய முதல்நாள் ஆட்டத்தில் இந்தியா 80 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் குவித்தது. அஸ்வின் 102 ரன்களுடனும், ஜடேஜா 86 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜடேஜா இன்று ரன் கணக்கை தொடங்காமல் நேற்றைய 86 ரன்னிலேயே ஆட்டமிழந்தார். ஜடேஜா- அஸ்வின் ஜோடி 199 ரன்கள் குவித்தது.
அடுத்து வந்த அர்ஷ் தீப் 17 ரன்கள் எடுதது ஆட்டமிழந்தார். அஸ்வின் 113 ரன்கள் எடுத்து வெளியேறினார். பும்ரா கடைசி விக்கெட்டாக 7 ரன்னில் ஆட்டமிழக்க இந்தியா முதல் இன்னிங்சில் 91.2 ஓவரில் 376 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. இன்று 11.1 ஒவரில் 37 ரன்கள் எடுப்பதற்குள் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது. வங்கதேச பந்து வீச்சாளர் ஹசன் முகமது 83 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் சாய்த்தார். தஸ்கின் அகமது 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.