மதுரையில் - விநாயகர் சிலையில் வைத்து வழிபட்ட லட்டு ரூ.1½ லட்சத்துக்கு ஏலம்!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மலைப்பட்டி கிராமத்தில் விநாயகர் சதூர்த்தியை யொட்டி விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் விநாயகர் கையில் லட்டு வைத்து பூஜைகள் நடந்தன.
நேற்று இந்த சிலையை எடுத்துச்சென்று அருகில் உள்ள கண்மாயில் கரைத்தனர்.
முன்னதாக சிலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட லட்டு கிராம மக்கள் சார்பில் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் அதே ஊரை சேர்ந்த மூக்கன் (வயது 45) என்பவர், ஒரு லட்டை ரூ.1 லட்சத்து 51 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார்.
இதனால் ஆச்சரியம் அடைந்த கிராம மக்கள் இனி ஒவ்வொரு ஆண்டும் இதே போன்று விநாயகர் சிலையில் வைத்து பூஜை செய்யப்படும் லட்டு ஏலம் விடப்படும் எனவும், இந்த ஆண்டு ஏலம் எடுத்த மூக்கனுக்கு அடுத்த ஆண்டு 1 பவுன் தங்க மோதிரம், 10 வேட்டி, சட்டை, 5 சேலைகள் பரிசாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.
லட்டை ஏலம் எடுத்த மூக்கன் வெளியூரில் முறுக்கு வியாபாரம் செய்து வருகிறாராம்.