வங்காளதேச சூழல் இந்தியாவில் ஏற்படலாம்; பா.ஜ.க. கடும் கண்டனம்!
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சல்மான் குர்ஷித், சசி தரூர் உள்ளிட்டோர் நேற்றிரவு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர்.
இதில் பேசிய குர்ஷித், மேலோட்டத்தில் பார்க்கும்போது எல்லாம் இயல்பாக இருப்பது போல் தோன்றும்.
ஆனால் வங்காளதேசத்தில் நடப்பது இந்தியாவிலும் கூட நடைபெறலாம் என கூறினார்.
அவருடைய இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிகழ்ச்சியில் உடன் இருந்த சசி தரூர் இதுபற்றி கூறும்போது, குர்ஷித் என்ன அர்த்தத்தில் பேசினார் என என்னால் கூற முடியவில்லை.
வங்காளதேசம் நமக்கு அளித்திருக்கும் மிக பெரிய செய்தியானது, ஜனநாயகத்தின் முக்கியத்துவம் மற்றும் வெளிப்படையான மற்றும் நல்ல முறையிலான தேர்தல் நடைபெற வேண்டும் என்பதேயாகும் என்றார்.
குர்ஷித்தின் இந்த பேச்சுக்கு காங்கிரசுக்கு எதிராக பா.ஜ.க. தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதுபற்றி பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாக்குர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது,
3 முறை தொடர்ந்து மக்களவை தேர்தலில் தோல்வியை தழுவிய முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி,
நாட்டை அராஜகத்தில் தள்ள பார்க்கிறது. அரசுக்கு எதிரான கோட்பாடுகளை வெளிப்படுத்துகிறது.
இதுபோன்ற எள்ளி நகையாட கூடிய காங்கிரஸ் தலைவர்களின் பேச்சுகள் அக்கட்சியின் மனநிலையை பிரதிபலிக்கின்றன என கூறினார்.
உலகின் மிக விரைவான வளரும் பொருளாதார நாடாக மற்றும் கடினம் வாய்ந்த தருணங்களில் நம்பிக்கைக்குரிய நாடாக நாம் உள்ளபோது,
நாட்டை பின்னுக்கு தள்ளுவதில் எதனையும் செய்ய தயாராக உள்ள கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது என்றும் அவர் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
நாட்டில் ஒரு நெருக்கடியை பரப்ப அக்கட்சி தொடர்ந்து முயற்சிக்கிறது என்றும் அவர் கூறினார்.
பா.ஜ.க. எம்.பி. ராஜீவ் பிரதாப் ரூடி, மற்றொரு எம்.பி.யான சம்பித் பத்ரா ஆகியோரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Tags:
#வங்காளதேசம்
# காங்கிரஸ்
# பா.ஜ.க.
# Bangladesh
# Congress
# BJP