வெர்டிகோ தலைசுற்றல் தடுக்க... இந்த 5 எளிய யோகா பயிற்சிகள் செய்து பாருங்க!

வெர்டிகோ தலைசுற்றல் தடுக்க... இந்த 5 எளிய யோகா பயிற்சிகள் செய்து பாருங்க!
By: No Source Posted On: August 06, 2024 View: 2637

வெர்டிகோ தலைசுற்றல் தடுக்க... இந்த 5 எளிய யோகா பயிற்சிகள் செய்து பாருங்க!

 

வெர்டிகோ

 

வெர்டிகோ தலைச்சுற்றல் சில சமயங்களில் அச்சத்தினால் ஏற்படும்.

 

இதில் நம்முடைய தலை மட்டும் சுற்றுவது, நம்மைச் சுற்றி உள்ள பொருள்கள் மட்டும் சுற்றுவது அல்லது நாம் இருக்கும் இடம் மட்டும் சுற்றுவதுபோலத் தலைசுற்றல் ஏற்படும்.

 

ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நீர்வறட்சி ஏற்படும்போது, இதுபோன்று தலைசுற்றல் ஏற்படலாம். இதனால் காது கேளாமை, உடல் சோர்வு போன்றவை உண்டாகும்.

 

அறிகுறிகள்;

 

குமட்டல், வாந்தி, நடப்பதில் சிரமம், அதிக வியர்வை, பார்க்கும் பொருள்கள் மங்கலாக அல்லது இரண்டாகத் தெரிவது, பேசுவதில் உளறல்

 

செய்ய வேண்டியவை

 

இரவு நேரங்களில் 6 - 8 மணி நேரம் சீரான தூக்கம் அவசியம்.

 

 

பாதாம் மற்றும் தர்பூசணியைச் சாறாகப் பருகலாம்.

 

தேன் கலந்த இஞ்சி டீயைத் தினசரி குடிக்கலாம், இது குமட்டல் மற்றும் வாந்தியைக் கட்டுப்படுத்தும்.

 

இந்தப் பிரச்னைக்கு மருந்து, மாத்திரைகள் மட்டும் தீர்வு அல்ல.

 

யோகா செய்வதன் மூலம் வெர்டிகோ தலைச்சுற்றலைச் சரிசெய்யலாம்.

 

5 யோகா பயிற்சிகள்

 

தடாசனா

 

 


நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும். பாதம் முழுவதும் தரையில் பதியுமாறு நிற்க வேண்டும்.

 

இப்போது, உடலின் எடை முழுவதும் தரையில் உள்ளது என்பதை உணர முடியும்.

 

முதுகுத்தண்டு நேராக இருக்கும்படி நிற்க வேண்டும். சுவற்றில் சாய்ந்தும் இந்தப் பயிற்சியைச் செய்யலாம்.

 

தலை, தோள்பட்டை, இடுப்பு மற்றும் பாதங்கள் சுவற்றை ஒட்டி இருக்குமாறு இருக்க வேண்டும்.

 

தோள்பட்டைகளைத் தளர்வாக வைத்துக்கொள்ளவும். இரண்டு கைகளின் உள்ளங்கையையும் பக்கவாட்டில் உடலை ஒட்டியிருக்கும்படி வைத்திருக்க வேண்டும்.

 

சீராக மூச்சை இழுத்து, விட வேண்டும்.

 

இந்தநிலையில் சில நிமிடங்கள் அப்படியே நிற்க வேண்டும்.

 

இப்போது உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை ஒரு நேர்கோட்டில் சுவாசம் செல்வதை உங்களால் உணர முடியும்.

 

யோகா பயிற்சிகளைப் புதிதாகச் செய்ய ஆரம்பிப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த பயிற்சி.

 

தலைசுற்றல் உள்ளவர்கள் இந்தப் பயிற்சியைச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

 

ஸ்வஸ்திகாசனா

 

 

விரிப்பில் கால்களை நீட்டியபடி அமர வேண்டும். வலது கால் மேல் இடது கால் இருக்கும்படி பத்மாசனநிலையில் உட்கார வேண்டும்.

 

முழங்கால்கள் தரையைத் தொட்டபடி இருக்க முயற்சி செய்யலாம்.

 

இப்போது, முதுகுத்தண்டு மற்றும் தலை நேராக இருக்க வேண்டும். கைகளைக் கால் முட்டியின் மீது வைக்க வேண்டும்.

 

சின் முத்திரை அல்லது உள்ளங்கையை வானத்தைப் பார்த்தபடி வைக்க வேண்டும்.

 

இப்போது, கவனம் முழுவதையும் இடுப்பு மற்றும் முதுகுத்தண்டு இணையும் இடத்தில் வைக்க வேண்டும். இந்த நிலையில் சில நிமிடங்கள் இருக்கலாம்.

 

இது, உடலின் நடுமையத்தை உணர உதவும். இடுப்பு மற்றும் முதுகுத்தண்டை வலுப்படுத்தும். தலைசுற்றலால் ஏற்படும் உடல் மாற்றத்தைச் சரிசெய்யும்.

 

தலையும் முதுகுத்தண்டும் இணையும் பகுதி வலுப்பெறும், முதுகுவலியைக் குறைக்கும்.

 

பிரிட்ஜ் போஸ் (அ) சேது பந்த சர்வாங்காசனா

 

 

விரிப்பில் மல்லாந்து படுக்க வேண்டும்.

 

கைகளைப் பக்கவாட்டில் வைக்க வேண்டும். கால்களை உட்புறமாக மடக்க வேண்டும்.

 

தோள்பட்டை மற்றும் தலையில் சிறிய அழுத்தத்தைக் கொடுத்து, கீழ் உடலை உயர்த்த வேண்டும்.

 

தலை நேராக வானத்தைப் பார்த்தபடி இருக்கட்டும்.

 

இதேநிலையில் சில நிமிடங்கள் இருக்க வேண்டும்.

 

சரியான உடலமைப்பைப் பெற உதவும். முதுகுத்தண்டை வலுப்படுத்தும்.

 

மார்புப்பகுதியை விரிவடையச்செய்யும். கூன் போடுவதைச் சரிசெய்யும்.

 

இந்தப் பயிற்சியின்போது உடனடியாக உடல் இருக்கும்நிலையை மாற்ற முயற்சிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

 

சுப்த பாதாங்குஸ்தாசனா (அ) ஹேண்டு டு பிக் டோ போஸ்

 

 

விரிப்பில் மல்லாந்து படுக்க வேண்டும்.

 

தலை, தோள்பட்டை, முதுகுத்தண்டு, இடுப்பு மற்றும் குதிகால் தரையில் படும்படி இருக்கட்டும்.

 

இப்போது வலது காலை உயர்த்தி முடிந்த வரை மார்புப் பகுதியைத் தொடுமாறு செய்ய வேண்டும்.

 

காலைத் தூக்கும்போது, இடுப்பு மற்றும் இடது முழங்கால் தரையில் இருக்கும்படி முயற்சிக்க வேண்டும்.

 

பின்பு, பழையநிலைக்கு வர வேண்டும். இப்போது இதேபோன்று இடது காலுக்கும் செய்ய வேண்டும்.

 

இப்படிச் செய்வது ஒரு செட். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து ஐந்து முறை செய்யலாம்.

 

தொடை, முழங்கால் பகுதியைச் சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்தும். உடலின் சமநிலைத்தன்மையை மேம்படுத்தும்.

 

தண்டாசனா (அ) ஸ்டஃப் போஸ்

 

 

விரிப்பில் நேராக நிமிர்ந்து அமர வேண்டும்.

 

கால்களை நீட்ட வேண்டும். உள்ளங்கைகளைப் பக்கவாட்டில் பதிக்க வேண்டும்.

 

பாதங்கள் நேராக இருக்க வேண்டும்.

 

இதேநிலையில் சில நிமிடங்கள் அமர்ந்திருக்க வேண்டும். சீராக மூச்சை இழுத்துவிட வேண்டும்.

 

உடலின் சமநிலைத்தன்மையை மேம்படுத்தும்.

 

கை மற்றும் கால் தசைகள், தொடைப்பகுதியில் உள்ள தசைகளை வலுப்படுத்தும்.

 

கால் தசைப் பிடிப்புகளை நீக்கும். முதுகுத்தண்டு மற்றும் பாதம் வலுப்பெற உதவும்.

 

முதல்முறை செய்பவர்களின் கவனத்துக்கு

 

முதல்முறையாக இந்தப் பயிற்சிகளைச் செய்பவர்கள், ஒவ்வோர் அசைவையும் மெதுவாகச் செய்ய வேண்டும்.

 

திடீரென ஏற்படும் உடல் அசைவாலும் தலைசுற்றல் ஏற்படலாம்.

 

யோகா பயிற்சியாளர்கள் அல்லது இயற்கை மருத்துவர்களின் ஆலோசனைப்படி இந்தப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

 

இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்வதால், உடல் மற்றும் மனம் அமைதி அடைவதை உணர முடியும்.

Tags:
#வெர்டிகோ  # தலைசுற்றல்  # Health Tips  # Dizziness  # Vertigo 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos