சகல நலன்களைத் தரும் ஸ்ரீசக்கர நவாவரண பூஜை...

சகல நலன்களைத் தரும் ஸ்ரீசக்கர நவாவரண பூஜை...
By: No Source Posted On: July 28, 2024 View: 1479

சகல நலன்களைத் தரும் ஸ்ரீசக்கர நவாவரண பூஜை...

 

காஞ்சி காமாட்சி அம்மன் தமிழ்நாட்டில் வேறு எந்தத் தலத்திலும் இல்லாத விசேஷமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகியோரின் ஒரே உருவமாக அருள்பாலிக்கிறாள்.

 

பார்வதி தேவியின் இரு கண்களாக மகாலட்சுமியும் சரஸ்வதி தேவியும் உள்ளனர்.

 

எனவே பௌர்ணமி, நவராத்திரி போன்ற முக்கியமான தினங்களில் இத்தலத்துக்கு வருகை தந்து அம்மனை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகும்.

 

சாந்த சொரூபமாகக் காட்சியளிக்கும் காமாட்சி அன்னை இத்தலத்தில் மூன்று ஸ்வரூபமாக,

 

அதாவது காரணம் (பிலாஹாசம்), பிம்பம் (காமாட்சி), சூட்சுமம் (ஸ்ரீ சக்கரம்) என மூன்று சொரூபத்தில் வீற்றிருக்கிறாள்.

 

அம்பிகை வீற்றிருக்கும் இடம் காயத்ரி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.

 

அந்த மண்டபத்தில் பல ரிஷிகள் தவமிருந்து காமாட்சியின் அருளைப் பெற்றுள்ளனர்.

 

இந்த மண்டபப் பகுதியில் இருந்து பார்த்தால் அன்னை முன்பு ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதைக் காண முடியும். அன்னை காமாட்சிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்போது,

 

இந்த ஸ்ரீ சக்கரத்துக்குதான் குங்கும அர்ச்சனை நடத்தப்படும்.

 

இந்த சக்கரத்தை சிலா ரூபமாக இங்கு ஸ்ரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.

 

இதனால் இத்தலத்தில் ஸ்ரீவித்யா உபாசன வழிபாடு நடத்தப்படுகிறது.

 

இது ஸ்ரீ சக்கரத்தை அடிப்படையாகக் கொண்டது.

 

அதியற்புத சக்தி வாய்ந்த இந்த ஸ்ரீ சக்கரத்தை சுற்றி 64 கோடி தேவதைகள் வீற்றிருப்பதாக ஐதீகம்.

 

இந்த ஸ்ரீ சக்கரம் ஒன்பது ஆவரணங்களைக் கொண்டது. ஆவரணம் என்றால் பிராகாரம் அல்லது சுற்று என்று பெயர்.

 

ஸ்ரீ சக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவாரம் தரும் சக்தி தேவதைகள் மற்றும் ஸித்தியைத் தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ், வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா, பிராப்தி ஆகிய ஒன்பது ஸித்தி தேவதைகள் உள்ளனர்.

 

பௌர்ணமி தினத்தன்று இந்த ஒன்பது நவாவரண சுற்றுக்கும் ஒவ்வொரு சுற்று வீதமாக சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

 

ஒன்பது சுற்றுகளுக்கும் பூஜை நடைபெறும் போது சங்கு தீர்த்தமும் இடம் பெற்றிருக்கும்.

 

ஒன்பது ஆவரணத்துக்கும் பூஜைகள் முடிந்த பிறகு பிந்து ஸ்தானத்தில் வீற்றிருக்கும் காமாட்சி அம்பிக்கைக்கு ஆராதனைகள் நடைபெறும். இதுதான் நவாவரண பூஜை ஆகும்.

 

இந்தப் பூஜை மிகவும் சிறப்பானது. விசேஷமான பலன்களைத் தரவல்லது. நன்கு உபதேசம் பெற்றவர்கள்தான் இந்த பூஜையைச் செய்ய முடியும்.

 

நவாவரண பூஜையின் அளவிடற்கரிய பலன்களை ஏழை-எளிய மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் காமாட்சி அன்னை முன்பு ஸ்ரீ சக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.

 

அந்த ஸ்ரீ சக்கரத்தை சாதாரணமாக தரிசனம் செய்தாலே பலன்கள் வந்து சேரும். அப்படி இருக்கும்போது புனிதமான பௌர்ணமி தினத்தில் ஸ்ரீ சக்கரத்தின் ஒன்பது சுற்றுக்களிலும் உள்ள தேவதைகளுக்கு பூஜைகள் நடப்பதை தரிசித்தாலே கோடான கோடி பலன்கள் நம்மை நாடி வரும்.

 

அது மட்டுமல்ல, ஸ்ரீ சக்கரத்தை சுற்றியுள்ள கவசங்களில் அஷ்ட லட்சுமிகளும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்.

 

எனவே, ஸ்ரீ சக்கரத்தில் இருந்து பெறப்படும் குங்குமத்துக்கு எல்லையற்ற சக்தி உண்டு.

 

இந்த குங்குமத்தை பெற்ற பிறகு நவாவரண பூஜையில் படைக்கப்பட்ட சங்கு தீர்த்த பிரசாதத்தையும் பெற்று விட்டால் நீங்கள் பாக்கியசாலிதான்.

Tags:
#ஸ்ரீசக்கர நவாவரண பூஜை  # காமாட்சி அம்மன்  # ஆன்மிகம்  

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos