ஐ.டி. பார்க்கின் கட்டுமான பணிகள் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
இந்தியாவில் முதல் முறையாக மலைவாழ் மக்களுக்காக ஊட்டி பகுதியில் ஒரு புதிய தொழில் சார்ந்த நிறுவனம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
தஞ்சைபுதிய பஸ் நிலையம் அருகே மேல வஸ்தாசாவடியில் 55000 சதுர அடியில் ரூ.30.50 கோடி மதிப்பில் டைடல் நியோ ஐ.டி. பார்க் கட்டப்பட்டு வருகிறது.
இப் பணிகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஐ.டி. பார்க்கினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
முதல் -அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான சிறப்பான ஆட்சியில் இளைஞர்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டு புதிய புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன என்றார்.
தஞ்சாவூரில் அமைந்துள்ள ஐ.டி. பார்க்கின் கட்டுமான பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளது. இன்னும் சில வாரங்களில் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
இந்த ஐ.டி. பார்க் வருவதன் மூலம் |டெல்டா பகுதியை சேர்ந்த படித்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த ஐ.டி. பார்க்கில் ஏற்கனவே 2 நிறுவனங்கள் முன்பதிவு செய்துவிட்டன . இன்னும் 7 நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
மேலும் தஞ்சை பகுதியில் புதிதாக சிப்காட் வரவுள்ளது. அதன் மூலமும் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் .
செங்கிப்பட்டி பகுதியில் உள்ள காசநோய் மருத்துவமனை அகற்றப்படும் எனக் கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறமான தகவல். இந்த பொய் தகவல்களை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மலைவாழ் மக்களுக்காக ஊட்டி பகுதியில் ஒரு புதிய தொழில் சார்ந்த நிறுவனம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் . இது இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லை. என கூறினார்.
பல லட்சம் கோடி அளவுக்கு தமிழ்நாட்டில் முதலீட்டை கொண்டு வந்துள்ளோம். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் தொழில் தொடங்க அதிக அளவில் நிறுவனங்கள் முன் வருகின்றன. அதற்கு முதல் -அமைச்சரின் மகத்தான ஆட்சியே காரணமாகும். தொழில் தொடங்க முன் வருபவர்கள் முதலில் கதவை தட்டுவது முதலமைச்சரின் வீட்டு கதவை தான். என்று ராஜா கூறினார்.
தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி அளித்த போது, டெல்டா பகுதி விவசாயம் நிறைந்ததாகும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஐ.டி.பார்க் கொண்டுவரப்பட்டு வருகிறது.
டெல்டாவில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் .
இந்த கல்வி ஆண்டில் இதுவரை 3 லட்சத்து 57 ஆயிரம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர்.
இது கடந்த ஆண்டை விட 5 சதவீதம் அதிகமாகும். புதிதாக வகுப்பறை கட்டும் பணி நடந்து வருகிறது. அரசு பள்ளி சார்ந்து புதிய திட்டங்களை முதலமைச்சர் கொண்டு வருவதால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இன்னும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும் என்றார்.
Tags:
#Anbil Mahesh
# TRB Raja
# MK Stalin
# DMK
#