அகம் இனிக்கும் கண்ணனின் திருநாமம்!!

அகம் இனிக்கும் கண்ணனின் திருநாமம்!!
By: No Source Posted On: October 18, 2024 View: 862

அகம் இனிக்கும் கண்ணனின் திருநாமம்!!

இப்போது நாம் குலசேகராழ்வார் அருளிய முகுந்த மாலையின் முதல் ஸ்லோகத்தை பார்த்துக்கொண்டே வருகிறோம்.

 

ஸ்ரீவல்லபேதி வரதேதி தயாபரேதி

 

பக்தப்ரியேதி பவலுன்டன கோவிதேதி

 

நாதேதி நாகஸயனேதி ஜகந்நிவாஸேதி

 

ஆலாபனம் ப்ரதிதினம் குருமே முகுந்த

 

முதல் மூன்று நாமங்களில் மூன்று க்ஷேத்ரங்களை ஞாபகப்படுத்திவிட்டு, பக்தப் ப்ரியேதி என்று சொல்லும்போது பக்தனுக்கு பிரியமாக இருக்கக்கூடிய பகவானுடைய நிலை எதுவென்றால், அர்ச்சாவதாரம் என்கிற நிலை. நம்மால் வெகு எளிதாக இதை பிடித்துக் கொள்ள முடியும்.

 

இந்த அர்ச்சையிலிருந்து அந்தர்யாமியாக இருக்கக் கூடிய நிலையை நமக்குக் காண்பித்துக் கொடுக்கிறார். அதை பவலுண்டன கோவிதேதி… என்று காண்பித்துக் கொடுக்கிறார். சம்சாரத்தை எவன் திருடுகின்றானோ அவனே. இன்னொரு பொருளும் உண்டு. பவ என்கிற சப்தத்திற்கு உண்டாவது என்று அர்த்தம். ஏதாவது ஒரு விஷயம் உண்டாகிறது என்றால் அதற்கு பவ என்று அர்த்தம். நாம் எப்படி உண்டாயிருக்கோமெனில், பிறப்பு மூலமாகத்தான் உண்டாகியிருக்கிறோம். இந்த ஜென்மா நமக்கு உண்டாயிருக்கிறது.

 

பிறப்பு உண்டெனில் இறப்பும் உண்டு. இப்படி கட்டுப்பாடு வரும்போது இந்த சம்சார சாகரத்திற்குள் சிக்கிக் கொள்கிறோம். இப்போது இந்த பவம் என்று சொல்லக் கூடிய பிறப்பை, இந்த ஜென்மாவை எவன் திருடிக்கொள்கிறானோ அவனுக்குப் பவலுண்டன கோவிதன் என்று பெயர். நம்முடைய பிறப்பை நிறுத்தி பிறப்பை யார் திருடுவான் எனில், நமக்குள் அந்தர்யாமியாக இருக்கும் பெருமாளால்தான் அதைச் செய்ய முடியும். நமக்குள் ஆத்மாவாக இருந்து அந்தர்யாமியாக இருக்கிறேன் என்று எப்போது காண்பித்துக் கொடுக்கிறாரோ அப்போதே நமக்கு பிறவி இல்லாமல் போய்விடுகிறது.

 

இப்போது அதற்கடுத்து அந்தர்யாமி நிலையிலிருந்து எதைப் பிடிக்க வேண்டுமெனில் விபவ அவதாரங்களை பிடிக்க வேண்டும். இங்கு நாதேதி என்கிறார். நாதன் என்றால் தலைவன் என்று பெயர். இந்த அவதாரங்களிலெல்லாம் பகவானின் தலைமைப் பண்பைத்தான் காட்டுகிறார். ராமாவதாரத்தில் பகவானுக்கு ரகுநாதன் என்று பெயர். கிருஷ்ணாவதாரத்தில் யதுநாதன் என்று பெயர்.

 

யாதவ குலத்திற்கு எவன் தலைவனாக இருக்கிறானோ அவன் கிருஷ்ணன். ராகவ குலத்திற்கு எவன் தலைவனாக இருக்கிறானோ அவனே ரகுநாதனாகிய ராமன். அப்போது தலைமைப் பண்புகள் காண்பிப்பதாக அவதாரங்கள் வெளிப்படுவதினால் நாதன் என்கிற நாமமானது விபவ நிலையை காண்பித்துக் கொடுக்கிறது.

 

இந்த விபவ நிலையிலிருந்து சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரமெல்லாம் செய்வதற்காக, வியூக நிலையில் இருக்கிறார். இந்த நிலையில் பகவான் நாக சயனனாக ஆதிசேஷனின் மீது திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கிறான். ஆழ்வார் இதை நாக சயனேதி என்கிறார். இது பகவானின் வியூகநிலை ஆகும்.

 

இப்போது இந்த வியூக நிலையை பார்த்துவிட்டு அதற்கும் மேலே செல்லும்போது ஜகந்நிவாஸேதி என்று ஆழ்வார் சொல்கிறார். ஜகத்தை முழுவதும், இந்த மொத்தப் பிரபஞ்சம் முழுவதும் யாருடைய வயிற்றுக்குள் வைத்திருக்கிறானோ … அடங்கியிருக்கோ… இந்த மொத்தப் பிரபஞ்சம் முழுவதிலும் யார் வியாபித்திருக்கிறானோ… அவனே ஜகந்நி வாஸன்… நாராயண ஸூக்தத்தில் “அந்தர் பஹிஸ்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயண ஸ்தித:…” என்று உள்ளும் புறமும் எல்லாமுமே எவன் நிறைந்திருக்கிறானோ என்று வேதம் நமக்கு காண்பித்துக் கொடுக்கிறதோ அதைத்தான் இங்கு ஆழ்வார், ஜகந்நிவாஸன் என்று காண்பித்துக் கொடுக்கிறார். எனவே, ஜகந்நிவாஸன் என்கிற நாமாவானது பகவானின் பர நிலையை பரவாசுதேவனாக யார் இருக்கிறானோ அவனே ஜகந்நிவாஸன் எனும் நாமத்தோடு இருந்து உணர்த்துகிறான்.

 

இப்படியெல்லாம் இந்தந்த நாமாக்களின் மூலமாக பகவானின் ஐந்து நிலைகளைக் காண்பித்துக் கொடுத்து, கடைசியாக நமக்கு ஒரு பிரார்த்தனை வைக்கிறார். இந்த நாமாக்களையெல்லாம் மீண்டும் மீண்டும் நான் அடிக்கடி சொல்ல வேண்டும். அதற்கு நீ அருள் புரிய வேண்டும் முகுந்தா என்று பகவானிடம் கிருஷ்ணனிடம் முதல் ஸ்லோகத்திலேயே இவ்வளவு பெரிய விஷயத்தை சொல்கிறார். முதல் மூன்று நாமங்களின் மூலமாக மூன்று க்ஷேத்ரங்களையும் ஞாபகப்படுத்தி, அதற்கு அடுத்து வரக்கூடிய ஐந்து நாமங்களின் மூலமாக அர்ச்சை, அந்தர்யாமி, விபவம், வியூகம், பரம் என்கிற பகவானின் நிலைகளை படிப்படியாக காண்பித்துக் கொடுத்து அதை எப்படி பிடிக்க வேண்டும் சொல்கிறார்.

 

கடைசியாக இவ்வளவு விஷயங்களை ஆழ்வார் சொல்கிறாரே… இதையெல்லாம் எப்படி கடைப்பிடிப்பது, எப்படி அறிவது என்கிற ஆச்சரியமும் திகைப்பும் வரும். அதற்கு மிகமிக சுலபமான வழியையும் இங்கேயே நமக்குக் காண்பித்துக் கொடுக்கிறார். ஒன்றுமே செய்ய வேண்டாம்… இப்போது நாம் பார்த்தோமே இந்த நாமாக்களை “பிரதிபதம் ஆலாபனம்…” அடிக்கடி பேசிக்கொண்டே இருந்தாலே போதும். “குரு மே முகுந்த…” அப்படி பேசிக்கொண்டே இருக்கும் நிலையில் பகவான் என்னை வைக்க வேண்டும் என்று குலசேகர ஆழ்வார் பிரார்த்தனை செய்கிறார்.

 

இந்த ஸ்தோத்திரம் முழுக்க நமக்கு நிறைய நாமங்களை ஆழ்வார் காண்பித்துக் கொடுக்கிறார். ஸ்ரீநாத நாராயண வாசுதேவ, ஸ்ரீகிருஷ்ண பக்தப்ரிய சக்ரபாணி பூராவும் நாமாக்களைத்தான் காண்பிக்கிறார்.

 

ஆனால், ஒரே ஸ்லோகத்தில் மட்டும், ஒரே ஒரு நாமாவை வைத்து மொத்தத்தையும் சொல்லிவிட்டார். அந்த நாமம் கிருஷ்ண நாமமாகும். கிருஷ்ண நாமாவை வைத்து எல்லா விஷயத்தையும் சொல்லிவிட்டார். வேறு நாமாவே இல்லாமல் முப்பத்து மூன்றாவது நாமம் முழுக்க முழுக்க கிருஷ்ண நாமம்.

 

க்ருஷ்ணோ ரக்ஷது நோ ஜகத்த்ரய குரு:

 

க்ருஷ்ணம் நமஸ்யாம்யஹம்

 

க்ருஷ்ணே நாமரஸத்ரேவோ விநிஹதா:

 

க்ருஷ்ணாய துப்யம் நமஹ

 

க்ருஷ்ணா தேவ ஸமுத்திதம் ஜகதிதம்

 

க்ருஷ்ணஸ்ய தாஸாஸ்ம்யஹம்

 

க்ருஷ்ணே திஷ்டதி ஸர்வேமததகிலம்

 

ஹே க்ருஷ்ண ரக்ஷஸ்வ மாம்.

 

இப்படியாக முழுக்க முழுக்க கிருஷ்ண நாமத்தையே சொல்லுகிறார்.

 

இதில் என்னவொரு விசேஷமெனில் சமஸ்கிருத இலக்கணத்தில் விபக்திகள் என்றொன்று உண்டு. அதாவது வேற்றுமை உருபுகள். எட்டுவிதமான வேற்றுமை உருபுகள் இருக்கின்றன. இந்த எட்டு வேற்றுமை உருபுகளான விபக்திகளை வைத்து இந்த ஸ்லோகத்தை அமைத்திருக்கிறார்.

Tags:
#கண்ணன்  # aanmeegam  #  

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos