
கோடை காலம் - வெப்பம் அதிகமாக என்ன காரணம் ? அதை எப்படி சமாளிக்கலாம்..!
தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கிவிட்டது. சுட்டெரிக்கும் வெயிலால் பகல் நேரத்தில் வெளியே தலைகாட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சில மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு 100 டிகிரியை கடந்து விட்டது.
இந்த வெயிலின் தாக்கம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதற்கு என்னதான் தீர்வு? என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
ஒரு நாட்டின் மொத்த பரப்பளவில் 3-ல் ஒரு பங்கு என்ற அளவுக்கு பசுமைப்பரப்பு இருக்க வேண்டும். அதாவது, 33.33 சதவீதம் என்ற அளவுக்கு மரங்கள் நிறைந்த வனப்பரப்பு இருக்க வேண்டும்.
ஆனால், இந்தியாவில் 21.71 சதவீதம் என்ற அளவுக்கே வனப்பரப்பு உள்ளது. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் 23.7 சதவீதமாக உள்ளது.
அப்படி என்றால், தமிழ்நாட்டில் இன்னும் வனப்பரப்பின் தேவை 9.63 சதவீதமாக உள்ளது. தற்போதைய நிலையில், தமிழ்நாட்டில் வனப்பரப்பு 22,877 சதுர கிலோ மீட்டராக உள்ளது. இதில், காப்பு காடுகள் 19,388 சதுர கிலோ மீட்டரும், பாதுகாக்கப்பட்ட காடுகள் 2,183 சதுர கிலோ மீட்டரும், வகைப்படுத்தப்படாத காடுகள் 1,386 சதுர கிலோ மீட்டரும் அடங்கும்.
இப்படி வனப்பரப்பு குறைவதால், புவி வெப்பமயமாதல் அதிகரிக்கும். வெப்பத்தின் அளவு உயர்வதுடன், மழையின் அளவு, காற்றின் தரம் குறையும். இது வருங்கால சந்ததிகளை வெகுவாக பாதிக்கும் நிலையை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் பசுமை பரப்பை அதிகரிக்கும் நோக்கத்தில், தமிழக அரசின் சார்பில் கடந்த 2021-ம் ஆண்டு பசுமை தமிழகம் இயக்கம் தொடங்கப்பட்டது.
இந்த இயக்கத்தின் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 10 கோடியே 86 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 36 மாவட்டங்களில், 310 நாற்றங்கால்களில் 33 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை போன்ற பெருநகரங்களில் இன்றைக்கு சாலை சிக்னல்களில் வெயிலின் தாக்கத்தை குறைக்க பச்சை நிற வலைப்பின்னலால் ஆன பந்தல்கள் போடப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகளின் வசதிக்காக இது செய்யப்பட்டு இருந்தாலும், சாலையோரம் இருபுறமும் மரங்கள் நிறைந்திருந்தால் இந்த செயற்கை பந்தல் அமைக்க வேண்டிய தேவையே இல்லை.
ஆனால், நகர்ப்புற வளர்ச்சி, சாலை விரிவாக்கம் என்ற பெயரில் சாலையோர மரங்களை வெட்டி விடுகிறோம். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களில்தான் அதிக அளவில் மரங்கள் வெட்டப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மரங்களை வெட்டுவதற்கு பதிலாக, மரங்களை இடமாற்றம் செய்யும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் என்று அவர்கள் யோசனை தெரிவிக்கின்றனர். ஆனால், இந்த தொழில்நுட்பம் பெரிய அளவில் கைகொடுப்பதில்லை என்பதுதான் உண்மை.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள மரங்களை பாதுகாப்பது அவசியம் என்பது பொதுமக்கள் மற்றும் அரசு இடையே விவாத பொருளாக மாறி விடுகிறது. நாமும் அரசையே குற்றம் சொல்லிக்கொண்டு இருக்காமல், வீட்டின் அருகேயோ, நமது ஊரில் குறிப்பிட்ட இடங்களிலேயோ மரக்கன்றுகளை நட்டு, அவற்றை தண்ணீர் ஊற்றி பராமரித்து வளர்க்கலாம். சில ஆண்டுகள்தான் இந்த நிலை.
சற்று உயரம் மரம் வளர்ந்துவிட்டால், அதன்பிறகு தேவையான நீரை மரத்தின் வேர்களே நிலத்தில் இருந்து உறிஞ்சி கொள்ளும். நமக்கு நிழல் தரவும் தொடங்கிவிடும்.அதுவும் கனி தரும் மரங்களாக இருந்தால், பிற உயிரினங்களின் பசியையும் போக்கும்.
நமது பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வைக்கின்றோம். அதுபோல, இயற்கையையும் காத்து, பசுமை பரப்பையும் சரியாக வைத்திருந்தால்தான், பருவ காலங்களில் நமக்கு தேவையானதை இயற்கை கொடையாக வழங்கும். நமது சந்ததிகளும் வாழையடி வாழையாக வாழும்.