
தோனியின் அசத்தல் ஆட்டம் - சென்னை அணி அசத்தல் வெற்றி ...!
லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லக்னோவில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து, லக்னோ அணியின் துவக்க வீரர்களாக அய்டன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய சென்னை வீரர் கலீல் அகமது, கடைசி பந்தில் மார்க்ரமை (6 ரன்) வீழ்த்தி நம்பிக்கை அளித்தார்.
அதையடுத்து, மார்ஷ் உடன், அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் இணை சேர்ந்தார். 4வது ஓவரை வீசிய அன்சுல் காம்போஜ், மிக நேர்த்தியாக பந்து வீசி, பூரனை (8 ரன்) எல்பிடபிள்யு முறையில் அவுட்டாக்கினார். பின், கேப்டன் ரிஷப் பண்ட் களமிறங்கினார். இந்த இணை 3வது விக்கெட்டுக்கு, 33 பந்துகளில் 50 ரன்கள் குவித்திருந்த நிலையில், 10வது ஓவரை வீசிய ரவீந்திர ஜடேஜா, மார்ஷை (30 ரன்) கிளீன் போல்டாக்கி வெளியேற்றினார். பின்னர், பண்ட்டுடன், ஆயுஷ் படோனி இணை சேர்ந்தார்.
இவர்கள் அதிரடியாக ரன் குவிக்கத் துவங்கியதால், ஸ்கோர் மளமளவென உயரத் துவங்கியது. 12.3 ஓவரில் லக்னோ அணி, 100 ரன்னை எட்டியது. ஜடேஜா வீசிய 14வது ஓவரில், படோனி ஏறியடித்து ஆட முயன்றபோது, தோனி ஸ்டம்ப் அவுட் செய்தார். அதையடுத்து, அப்துல் சமத், பண்ட்டுடன் இணை சேர்ந்தார். பதிரனா வீசிய கடைசி ஓவரின் 2வது பந்தில், அப்துல் சமத் (20 ரன்) ரன் அவுட்டானார். அடுத்த பந்தில் பண்ட் (49 பந்து, 63 ரன்) தோனியிடம் கேட்ச் தந்து வெளியேறினார்.
20 ஓவர் முடிவில் லக்னோ அணி, 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன் குவித்தது. அந்த அணியின் டேவிட் மில்லர் ரன் எடுக்காமல் களத்தில் இருந்தார். சென்னை தரப்பில், ரவீந்திர ஜடேஜா, பதிரனா தலா 2, கலீல் அகமது, காம்போஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். பின்னர் ஆடிய சென்னை அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய ஷேக் ரசீத், ரச்சின் ரவீந்திரா அபாரமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
இவர்கள் 52 ரன் சேர்த்த நிலையில் ஷேக், 27 ரன்னில் அவுட் ஆனார். அதன் பின், ரவீந்திரா 37, ராகுல் திரிபாதி 9, ஜடேஜா 7, விஜய் சங்கர் 9 ரன்களில் அவுட் ஆகினர்.
19.3 ஓவரில் சென்னை 5 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தோனி 11 பந்துகளில் 26, தூபே 37 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.