
எலுமிச்சை, புதினா நீர்! உடலுக்கு தரும் நன்மைகள் என்ன ?
ஆரோக்கியமாக உடலை வைத்துக் கொள்ள நம் வீட்டில் இருக்கும் எளிய பொருட்கள் போதுமானது. ஆனால் பெரும்பாலும் நாம் அதை செய்வதில்லை. உதாரணத்திற்கு, எலுமிச்சம் பழம் மற்றும் புதினா இந்த இரண்டும் இருந்தால் இதைவிட ஒரு சிறந்த உடல் ஆரோக்கியத்தை தரும் பொருள் இல்லை. தினமும் எலுமிச்சம்பழம் சாறில் புதினாவை கலந்து சாப்பிட்டுப் பாருங்களேன் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை கண்கூடாக காணமுடியும் அதைப்பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ,சி,தயாமின், கால்சியம் என பல வகையான சத்துக்கள் புதினாவில் உள்ளன. மேலும், இதில் ஆன்டி – ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி – மைக்ரோபியல் பண்புகள் நிறைந்துள்ளன. குளிர்ச்சித்தன்மை இருப்பதால் கோடைக்காலத்தில் இதை அதிகம் பயன்படுத்துவது நல்லது. புதினா வயிற்றுக்கு ஆரோக்கியமானது. வயிறு சம்பந்தமான பிரச்னைகள் இருந்தால் புதினாச் சாற்றை தண்ணீரில் கலந்து குடிக்க, வீக்கம் அஜீரணம், வாயு மற்றும் பிற பிரச்னைகளை நீக்குகிறது.
எலுமிச்சை ஒரு சிறந்த இயற்கையான நச்சு நீக்கியாக இருப்பதால் செரிமான ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது தொடர்ந்து புதினா லெமன் வாட்டரை உட்கொள்வது உடல் அமைப்பைச் சுத்தப்படுத்தி, உடலைச் சிறப்பாக செயல்பட வைக்கிறது.நமது உடல் எப்போதுமே நீர்ச்சத்துடன் இருக்க வேண்டுமானால் புதினா தண்ணீரைக் குடித்துவருவது நல்லது. சூரியஒளியில் இருந்து வீட்டிற்கு வந்தபிறகு இந்த பானத்தை குடிப்பது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும்.
புதினாவில் கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடை அதிகரிக்காது. புதினா தண்ணீர் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு, புதினா நீர் பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள வைட்டமின் சி சத்துகள் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது ஒரு சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக ‑இருப்பதால், செல் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
மேலும் வாந்தி அல்லது குமட்டல் இருந்தால் புதினா இலைகளை சாப்பிட அல்லது புதினா சாற்றை தண்ணீரில் கலந்து குடிக்க. குமட்டல், வாந்தி போன்றவற்றில் இருந்து விடுபடலாம். எலுமிச்சை, புதினா நீர் தொடர்ந்து அருந்தி உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, பல நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.