
பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார் ..!
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்படி, தமிழ்நாடு பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1989 முதல் அதிமுகவில்... - திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே தண்டையார் குளம் என்ற இடத்தை பூர்விகமாக கொண்டவர் நயினார் நாகேந்திரன் (64). முதுகலை பட்டம் பெற்றவர். இவருக்கு சந்திரா என்ற மனைவியும், 2 மகன்களும் 1 மகளும் உள்ளனர். 1989-ம் ஆண்டில் அதிமுகவில் இணைந்த நயினார் நாகேந்திரன் பணகுடி நகர செயலாளர், இளைஞர் அணி செயலாளர், திருநெல்வேலி மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர், மாநில ஜெயலலிதா பேரவையின் செயலாளர், தேர்தல் பிரிவு இணைச் செயலாளர் என பல்வேறு கட்சிப் பதவிகளை வகித்தவர்.
மின்சாரம் மற்றும் தொழில்துறை அமைச்சர்: 2001-ம் ஆண்டு திருநெல்வேலி சட்டப் பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் தொழில் துறை அமைச்சராக பணியாற்றினார். மீண்டும் 2006-ம் ஆண்டு திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். தொடர்ந்து 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப் பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் மீண்டும் அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை.
பாஜகவில் இணைந்தார்: 2016 -ம் ஆண்டு மீண்டும் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுகவில் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்களால் அதிமுகவை விட்டு விலகி 2017-ம் ஆண்டு பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். பாஜகவில் பணியாற்றிய அவருக்கு கட்சியின் மாநில துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது.
பாஜக எம்.எல்.ஏ: 2019-ம் ஆண்டு ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் மீண்டும் 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவருக்கு ஆதரவு கேட்டு உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம் செய்திருந்தார். இந்த தேர்தலில் நயினார் நாகேந்திரன் வெற்றிபெற்று தமிழக பாஜக சட்டப்பேரவை குழு தலைவராக இருந்து வருகிறார்.
மாநிலத் தலைவராக தேர்வு: கடந்த 2024 ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸிடம் தோல்வியை தழுவினார். இந்நிலையில்தான் தமிழக பாஜக தலைவராக தற்போது நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.